Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தவெக அரசு குண்டக்க மண்டக்க அரசாக இருக்கிறது; அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்தால் அரசு எதற்கு? ஆட்சி நிர்வாகம் எதற்கு..? முதல்வர் விஜய்க்கு உதயகுமார் கேள்வி

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:

தமிழக இளைஞர்கள் 5 லட்சம் பேருக்கு உள்ளாட்சிகளில் புதிய அரசு வேலைவாய்ப்புகள் என தவெக தேர்தல் அறிக்கை கொடுத்தனர். இன்றைக்கு தமிழ்நாடு அரசுப்பணிகளில் ஒப்பந்த முறைக்கு தவெக தீவிரம் காட்டி வருகிறது. ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த, தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் வழங்கும் முகமையாக நியமித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் தற்காலிக, அவுட்சோர்சிங் பணியாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

அரசு வேலை எதிர்பார்ப்பது அடிப்படை உரிமை. போட்டித் தேர்வினால் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி, நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய அரசு, இருக்கும் அரசு பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது எவ்வகையில் நியாயம்? அவசர தேவைக்கு அவுட்சோர்சிங் செய்யலாம். தற்போது அரசு ஒரு முகமையை நியமித்து, தற்காலிக பணியிடங்கள்தான் இனிமேல் என்று சொன்னால் அது நியாயமா? இளைஞர்களுக்கு கேட்க நாதி இல்லையா? விஜய் போட்ட அரசாணையால், லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியக் கனவு, எதிர்காலம், இருள் சூழ்ந்திருக்கிறது. இளைஞர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது.

அரசுப்பணிகளை தனியார் ஒப்பந்த அடிப்படையில் நியமித்து தாரைவார்த்துவிட்டு, கடந்த வாரம் அரசு போட்டித் தேர்வுக்கு வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியிட்டிருப்பது, கண்ணை குருடாக்கிவிட்டு அவருக்கு அழகான உலகத்தை காட்டுகிறேன் என்று சொல்வதாக உள்ளது. தவெக அரசு, குண்டக்க மண்டக்க அரசாக இருக்கிறது. இனி அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை கலைத்திட வேண்டியதுதான். அரசு பணியே இல்லை என்றால், அப்புறம் இந்த தேர்வாணையம் எதற்கு? எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்தால், அரசு எதற்கு? ஆட்சி நிர்வாகம் எதற்கு?.

இவ்வாறு பேசியுள்ளார்.