Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தவெக கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்தில் லேசான காற்றுக்கே சரிந்து விழுந்த தற்காலிக ஊடக அறை: அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.

இதில் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவிக்க உள்ளார்.

விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது ஒரு ஆண்டும், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு இரண்டு ஆண்டுகளும் என ஏற்கனவே மூன்று முறை கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 180 மாணவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க வரும் ஊடகவியலாளர்களுக்காகத் தனியாக அலுமினியத்தால் ஆன தற்காலிக ஊடக அறை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், லேசான காற்று வீசியபோதே அந்தத் தற்காலிக அறை திடீரெனச் சரிந்து விழுந்தது. அப்போது ஊடகவியலாளர்கள் யாரும் அறைக்குள் இல்லாமல், தங்களது கேமராக்கள், முக்காலிகள் உள்ளிட்ட செய்தி சேகரிப்புக்கான உபகரணங்களை அங்கு வைத்துவிட்டு வெளியே இருந்துள்ளனர்.

இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, சரிந்து விழுந்த தற்காலிக ஊடக அறை முழுவதுமாக அகற்றப்பட்டது. இந்தச் சம்பவம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.