Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தவெக வேளாண் பட்ஜெட்: பயிர்களை சேதம் செய்யும் வனவிலங்கு குறித்து அமைச்சர்!

சென்னை: தமிழகப் பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய வேளாண்துறை அமைச்சர் வினோத், உயர் விளைச்சலுக்கு உகந்த சான்று விதைகள் மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்கும் புதிய திட்டங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

விவசாயிகள் சான்று விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் 25 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்க முடியும். இதனை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக 2026–27ஆம் ஆண்டில் அரசு விதைப்பண்ணைகள் மற்றும் விவசாயிகள் நிலங்களில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான விதைப்பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் 43,400 மெட்ரிக் டன் சான்று விதைகள் ரூ.250 கோடி செலவில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையின் நிதியிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

மேலும், வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க பல்வேறு பாரம்பரிய மற்றும் நவீன முறைகள் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவைகளை விரட்டுவதற்காக கவண் கொண்டு அடித்தும், மூங்கிலால் செய்யப்பட்ட 'தட்டை' என்ற இசைக்கருவியை முழக்கியும் தினைப்புனங்களை காத்ததை, "ஒளிகழைத் தட்டை புடைநர் புனந்தோறும் கிளிகடி மகளிர் விளிப்படு பூசல்" என்றும், பன்றிகள் செல்லும் குறுகிய வழிகளில் அவை நுழையாத வகையில் 'அடார்' எனப்படும் பெரிய கற்பலகை பொறிகளை அமைத்து பயிர்களைக் காத்ததை, "விளைப்புனம் நிலத்தலின் கேழல் அஞ்சி புலைத்தொறும் மாட்டிய இருங்கல் அடார் அரும்பொறி" என்றும் மலைப்படுகடாம் நம் கண்முன் விரித்துக் காட்டுகிறது.

அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் தொடர்ந்து சேதமடைந்து, விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இதனைத் தடுக்கும் நோக்கிலும், பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றும் வகையிலும், 2026–27ஆம் ஆண்டில் ரூ.7 கோடியே 35 லட்சம் மதிப்பில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த திரவ வடிவிலான காட்டுப்பன்றி விரட்டியை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் திட்டம், 14,000 ஏக்கரில் ரூ.1 கோடியே 35 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

மேலும், காட்டுப்பன்றி மட்டுமல்லாமல் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பிற வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் வகையில், நடப்பாண்டில் 134 விவசாயிகளுக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் மின்வேலிகள் மானியத்தில் நிறுவப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.