தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்படும் காவிரி ஆற்றுப்படுகையின் உயிர் நாடியாக விளங்குகிறது, மேட்டூர் அணை. சேலம் மாவட்டம், மேட்டூரில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில், சம்பா சாகுபடிக்கான தண்ணீரை முதல்வர் விஜய் நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார். 91 அடியாக நிறைந்துள்ள மேட்டூர் அணையில் இருந்து அடுத்த 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
முதல்வர் திறந்துவிட்டுள்ள இந்த தண்ணீர் கடைமடை வரை போய் சேராது, பாதி தூரத்திற்குத்தான் செல்லும். அதுவும், பயன்படாத தண்ணீராகத்தான் தெரிகிறது என்கிறார்கள், விவசாயிகள். காரணம், மேட்டூர் அணையில் தற்போதைக்கு 91 அடிதான் தண்ணீர் இருக்கிறது. அதுவும் 45 நாட்களுக்கு மட்டும்தான் கொடுக்கவேண்டும் என உத்தரவு வந்துள்ளதால், இந்த தண்ணீர் போதுமானதாக இருக்காது என்கிறார்கள். மேலும், 110 நாள் பயிருக்கு, 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் விட்டால், மீதமுள்ள 65 நாட்களுக்கு தண்ணீர் கொடுப்பது யார்? என கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறப்பது மட்டுமே. இதை செய்தால்தான் டெல்டா பகுதியில் உள்ள பயிர்கள் பிழைக்கும்.
எனவே, கர்நாடகா அரசிடம் போராடி, நமக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தண்ணீரை பெற்று, 110 நாட்களும் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே டெல்டா காப்பாற்றப்படும். இல்லையேல், பயிர்கள் கருகும், விவசாயி வாழ்வு பாழாகும். இதுவரை, அதிக மழைப்பொழிவு காரணமாக 11 முறை மட்டுமே மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில், காலதாமதமாக 62-வது முறையாக பாசனத்துக்கு முதல்வர் தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். இது, வேதனைக்குரிய விஷயம். மேலும் வெறும் 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறப்பு என்பது வீண் வேலை. ஒரு வேளை, நீரின் அளவு அதிகரித்தால் தண்ணீரை வெளியேற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், இதற்கு, எந்த உத்தரவாதமும் கிடையாது.
மிக குறைந்த எண்ணிக்கையிலான டெல்டா விவசாயிகள், போர்வெல் வசதியை பெற்றிருந்தாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதால், குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை நம்பியே இருக்கிறார்கள். போர்வெல் இல்லாத டெல்டா மாவட்ட விவசாயிகள் முழுக்க முழுக்க காவிரியை நம்பியே பயிர் செய்து வருகிறார்கள். எனவே, 45 நாட்களுக்கு நீர் திறப்பு என்பதை மாற்றி, ஒரு நாளைக்கு 1 டிஎம்சி என்கிற விகிதத்தில் நிறுத்தாமல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி தண்ணீர் திறக்க வேண்டுமென்றால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு மதிக்கவேண்டும். இதற்கு தமிழக அரசு, மிக கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும். ‘’நாட்டின் முதுகெலும்பு, நம் விவசாயிகள்...’’ என வெறும் வாய்ச்சொல் பேச்சு மட்டும் உதவாது.



