Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாக்கு, மஞ்சள், தென்னை... பயிர்சுழற்சி முறையால் பலன்கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!

என்னோட நிலத்துல இயற்கை உரம் மட்டும்தான் போடணும். பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளே வரக்கூடாது. நிலத்துல விவசாயக் கழிவுகள் எதையும் எரிக்கக்கூடாது... இதையெல்லாம் பின்பற்றி, ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில விவசாயம் செய்றேன்” எனப் பேசத் தொடங்கினார் மூத்த விவசாயி சுப்ரமணி. நாமக்கல் மாவட்டம் ராசி புரம் வட்டம் கார்கூடல்பட்டி கிராமத்தில் 5 ஏக்கரில் பாக்கு, வாழை, தென்னை மரங்களை வளர்க்கும் இவர் கூடுதலாக மஞ்சள் சாகுபடியிலும் ஈடுபட்டு வருகிறார். அதோடு மாடு, கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டுவருகிறார். இயற்கை பச்சைப்பசேலென வளர்ந்து நிற்கும் சுப்ரமணியின் பாக்குத்தோப்பில் அவரைச் சந்தித்தோம்.

``அப்பா காலத்துலர்ந்தே விவசாயம் பாக்குறோம். நான் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிச்சிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செஞ்சேன். சின்ன வயசுலர்ந்தே அப்பாகூட விவசாயத்துலயும் உதவியா இருந்தேன். இப்போ ஓய்வு பெற்ற பிறகு, அந்த நிலங்களை ஆர்கானிக்கா மாத்தியிருக்கேன். அப்பா வச்ச நாட்டு நெட்டை ரக பாக்குமரம் ஒன்னரை ஏக்கர்ல இருக்கு. நான் 2 ஏக்கர்ல இண்டர்மங்களா ஹைப்ரிட் குட்டை ரகம் வச்சிருக்கேன். கர்நாடகாவிலருந்து விதைக்கன்று வாங்கி, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நட்டேன். இந்த குட்டை ரகம் நட்ட 4வது ஆண்டிலிருந்தே பலன் கொடுக்கும். நெட்டைரகம் பலன் கொடுக்க 8 ஆண்டுகள் ஆகும். குட்டைரகம் 15 ஆண்டுகள்தான் பலன் கொடுக்கும்.

நாட்டுரகம் 40 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். நாட்டுரகத்தில் காய்பறிப்பது கடினம். குட்டைரகத்தில் காய் பறிக்கிறது சுலபம். நடும் வரிசை கிழக்கு மேற்கா வைக்கணும். குட்டைரகம் மட்டையெல்லாம் நீளமா வரும்ன்றதால, 7அடிக்கு 7 அடி வச்சிருக்கோம். 2அடிக்கு 2 அடி குழி எடுத்து, குழியை ஆறவிடணும். ஆழமும் 2 அடி இருக்கணும். குழி எடுத்து மேல்மண்ணை தள்ளணும். வேப்பம்புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு போடணும். வேப்பம்புண்ணாக்கு கிலோ 80 ரூபாய் இருக்குற அசல் புண்ணாக்கு வாங்கிப் போடணும். கன்று நட்டு, திரும்பவும் மேல்மண்ணையே வச்சி மூடணும். மண்ணு இளக்கமா இருந்தா கன்று சீக்கிரமா வேர்புடிக்கும்” என நடவு செய்யும் முறை பற்றி விளக்கிய சுப்ரமணி மேலும் தொடர்ந்தார்.

“கன்னு வேர்புடிச்சி வளர 6 மாசம் ஆகும். 3 மாசத்துக்கு ஒரு தடவை ஊட்டமேற்றப்பட்ட தொழுஉரம் போடணும். சொட்டுநீர்ப்பாசனத்துல தண்ணி ஒன்னுவிட்டு ஒரு நாளைக்கு விட்டாப் போதும். களை வளராமப் பாத்துக்கணும். தண்ணி தேங்காம மண்ல ஈரப் பதம் இருக்குற அளவுக்கு மட்டும் விடணும். வளர வளர புதுகுருத்து வெடிச்சி வந்துக்கிட்டே இருக்கும். இலை கரும்பச்சையா இருக்குற மாதிரி பாத்துக்கணும். வெளிறிய பச்சையாச்சின்னா சத்துக் குறைவுன்னு அர்த்தம். அப்போ மீன் அமிலம், கோழிக்கழிவு, ஊட்டமேற்றிய தொழுவுரம் கலந்து போடணும். மரம் வளர வளர உரத்தோட அளவை அதிகரிக்கணும். பாக்கு கன்றா இருக்கும்போது அதுல வாழை வைக்கணும். ஏன்னா, பாக்குக்கு நிழல் தேவை. அதனால முதல் 2 ஆண்டுகள் பாக்குக்கன்று இருக்குற எடத்துலயே வாழைமரம் வச்சிருந்தேன். குட்டைப்பாக்கு மரம் ஒரு ஆண்டுல 3 அடி வரும். 3 ஆண்டுல 10 அடி வளர்ந்துடும். 2 ஏக்கர்ல 1500 மரங்கள் வச்சிருக்கேன். மரம் வச்சி மூனரை ஆண்டுகள் ஆகுது. 10 சதவீதம் மரங்கள் இப்போ காய்க்குது. இன்னும் 6 மாசத்துல எல்லாமே காய்ப்புக்கு வந்துடும்” என்றார்.

நாட்டுரகமான நெட்டை ரக மரங்கள் கால் நூற்றாண்டாக இவரது நிலத்தில் வளர்கின்றன. இதுகுறித்து கூறுகையில், ``நெட்டைரகம் வச்சி 25 ஆண்டுகள் ஆச்சி. இப்போ ஒன்னரை ஏக்கர்ல 1200 மரம் இருக்கு. பங்குனியில பாளை வெடிச்சி, ஆனியில குலைதள்ளத் தொடங்கும். மரத்துக்கு 4 குலை தள்ளினா, 2 கிலோ வரைக்கும் பாக்கு காய்க்கும். நாட்டுப்பாக்கு விலைஅதிகமா போகும். ஹைப்ரிட் பாக்கு விலை கொஞ்சம் குறைவா போகும். ஆனா சீக்கிரம் காய்க்கும்” என்றார். ஆளுயரத்துக்கு வளர்ந்த மஞ்சள் செடிகளை நமக்கு காண்பித்த சுப்ரமணி அதுகுறித்தும் பேசினார். “ மஞ்சள் சின்ன வயசுலர்ந்தே விளைவிக்கறோம். சேலம் கோ 1, கோ2 வச்சிருக்கேன். சேலம் மஞ்சள் பெருசா இருக்கும். நல்ல விளைச்சல் வரும்.

சாரிக்கு சாரி ஒன்னரை அடி இடைவெளி குடுத்து நடணும். மஞ்சள் நட்டு, தொழுவுரம், வேரோட்டத்துக்கு `வேம்’, பசுமைக்கு மீன் அமிலம் குடுக்கணும். களை எடுத்துட்டு நல்லா மண் அணைக்கணும். மண் அணைச்சி 2 மாசத்துல நல்லா வளந்துடும். மஞ்சள் தை மாசத்துல தாள் மடியும். தண்டு சுருங்கினப்புறம் 2 வாரம் கழிச்சி வெட்டி எடுக்கணும். இப்போ மஞ்சள் ஆறடி வரைக்கும் வளந்திருக்கு. போன வருஷம் விளைஞ்சதுல பெரும்பாலும் விதை மஞ்சளாவே வித்தேன். விதைக்கிழங்கை மண் இல்லாம கழுவி, தோட்டத்து நிழல்ல காயவச்சா முளைப்புத்திறன் நல்லா இருக்கும். இந்த ஆண்டு எனக்கு விதைக்குப்பு 50 கிலோ வச்சிப்பேன். மத்த மஞ்சளை வேகவச்சி காயவச்சி விப்பேன்” என்றார்.

மஞ்சளோடு வாழையும் வைத்திருக்கிறார். “பயிர் சுழற்சி ரொம்ப முக்கியம். மஞ்சள் போட்ட எடத்துல அடுத்து வாழையும், வாழை போட்ட எடத்துல மஞ்சளும் மாத்திப் போடுவோம். அதால ரெண்டுமே விளைச்சல் நல்லா இருக்கு. போன வருஷம் பூவன்பழம் போட்டேன். இப்போ தேன்வாழை. இத கற்பூரவள்ளி, சாம்பவாழைன்னும் சொல்வாங்க. திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்துல டாக்டர் ஜெயபாஸ்கரன் வழிகாட்டுதல்ல இந்த வாழையை பராமரிக்கறேன். 7 அடிக்கு 7 அடின்னு கன்னு வச்சிருக்கேன். இப்போ ஒரு தார்ல 8 சீப்பு வரைக்கும் காய்ச்சிருக்கு” என்றார்.

``வேலியோரமா தென்னைமரம் வச்சிருக்கேன். தென்னையோட மரத்தடியில உரம் போடக்கூடாது, தண்ணி கட்டக்கூடாது. வயலுக்கு போடுற உரமே, பாய்ச்சற தண்ணியே தென்னைக்கும் போகுது. அது 25 அடிக்கு மேல உயரமா வந்துடிச்சி. தீவனப்புல், தென்னை மட்டை எல்லாம் வீணானா எருவோட சேர்த்து மக்கவச்சிடுவோம். வாழை அறுவடை முடிஞ்சு சிலர் எரிப்பாங்க. நான் அப்டி செய்யாம அதையே உரமா பயன்படுத்திக்கிறேன். தென்னை மட்டை மூடாக்கு போட்டா நிலத்துக்கு வளமும் ஆகும், களைகளும் வளராம தடுக்கும். களையெடுக்குற செலவுமிச்சம். நிலமும் ஈர்ப்பதமா இருக்கும், தண்ணீரையும் சேமிக்கலாம். ”என விவசாய உத்திகளை விளக்கியவர், விற்பனை முறையைப் பற்றியும் விளக்கினார்.

“பாக்கை ஒப்பந்தக்காரங்க வந்து பறிச்சிட்டு போய்டுவாங்க மரத்துக்கு 700 ரூபாய் கொடுப்பாங்க. ஏக்கருக்கு 4 லட்சம் கிடைக்கும். நமக்கு செலவு 1 லட்சம் போக, 3 லட்சம் லாபம் கிடைக்கும். மஞ்சள் கிலோ 15லர்ந்து 20 ஆயிரம் வரைக்கும் விக்குது. காஞ்ச மஞ்சள் 2 டன் வரைக்கும் கிடைக்கும். வாழைப்பழத்தை மாணவர் விடுதிகளிலும், உழவர் சந்தைகளிலும் விக்கிறேன். உழவர் சந்தைல விக்கிறதால வாழைக்கு நல்ல விலை கிடைக்குது. தென்னையும் ஆண்டு ஒப்பந்தத்தில் காண்ட்ராக்ட் விட்டுருக்கேன். அவங்களே வந்து பறிச்சிடுறாங்க. கூட்டுப்பண்ணையும் லாபகரமா இருக்கு” என நிறைவாக பேசினார்.

தொடர்புக்கு:

சுப்ரமணி:

95789 65021.