Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது: ப்ளூம்பெர்க் அறிக்கையால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணி பற்றி ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை கிளப்பி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பரஸ்பர வரி என்ற வகையில் 25 சதவீதம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் என்று 50 சதவீதத்தை விதித்தார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் டிரம்ப் உள்பட அவரது ஆலோசகர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் திடீரென கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டிரம்ப் உள்பட அமெரிக்க பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை மாற்றி பேசினர். இந்தியா மீதான எதிர்ப்பை கைவிட்டனர்.

தற்போது, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசியதோடு, பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்கா அல்லது வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்றும், அமெரிக்காவுடனான வர்த்தகம் 500 பில்லியன் டாலராக உயர்த்த உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார். இதுபற்றி பிரதமர் மோடியோ, வரி குறைப்பு பற்றி மட்டுமே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார்.

வெளியுறவுத்துறை, வர்த்தக துறையும் இதுபற்றி இன்னும் சொல்லவில்லை. வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் மட்டும் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது என்று கூறுகிறார். ஆனால் டிரம்ப் வெற்றி பெற்று விட்டதாக ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் தான் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்காக டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனை நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் உறுதியாக தெரிவித்துள்ளாராம்.

இதுபற்றி ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: டிரம்ப் நிர்வாகத்தின் தொடர் தாக்குதல் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதி மீதான அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியின் பின்னணியில் அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினர். இது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் நடந்தது. அப்போது மார்கோ ரூபியோவிடம், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களின் மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. இந்தியா தனக்கு எதிரான பல அமெரிக்க அரசுகளை பார்த்துள்ளது. இதனால் டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும் வரை நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்துக்கு காத்திருப்போம்.

இந்தியா மீதான பகிரங்கமான விமர்சனங்களை நிறுத்த வேண்டும். அதுதான் இரு நாடுகளின் உறவுகளை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு செல்ல உதவும் என்று அஜித் தோவல் கூறியுள்ளார். இந்த தகவலை டெல்லியில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால் இந்த சந்திப்பு பற்றி இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சகமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இவர்களது சந்திப்பிற்கு பிறகு தான் டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களின் தொனியில் மாற்றம் ஏற்பட்டது.

முன்னதாக, பிரதமர் மோடிக்கு எதிராக டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர் பீட்டர் நவ்ரோ கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மேற்கொண்டதாக டிரம்ப் உரிமை கோரினார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை சுட்டிக்காட்டி இது மோடியின் போர் என்று பீட்டர் நவ்ரோ விமர்சனம் செய்திருந்தார். மேலும் 50 சதவீத வரி விதிப்பும் நம் நாட்டுக்கு அடியாக விழுந்தது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசலை அதிகப்படுத்தியது. அதன்பிறகு டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் நம் நாட்டை விமர்சனம் செய்வதை கட்டுப்படுத்தினர். இதற்கு அஜித் தோவல் - மார்கோ ரூபியோ சந்திப்புதான் காரணம் எனவும் ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கிறதா இந்தியா?

அமெரிக்காவுடனான வர்த்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும்கூட ரஷ்யாவின் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த நம் நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு இதுவரை எந்த அறிவுரைகளையும் வழங்கவில்லை. ஆனால் சமீபகாலமாக ரஷ்யாவிடம் இருந்து நம்நாடு வாங்கும் கச்சா எண்ணெயின் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டை எடுத்து கொண்டால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், நாயரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தான் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வாங்கியது.

இது உச்சபட்ச அளவாகும். அதன்பிறகு தினமும் 1,50,000 பேரல் கச்சா எண்ணெயை வாங்கியது. தற்போது 1 லட்சம் பேரல்களுக்கு கீழாக குறைந்துள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கையும் குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான கச்சா எண்ணெய்க்கான போக்குவரத்து கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டன. அதனை நிறுத்த முடியாது. அதன்பிறகு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக ஒன்றிய அரசின் அறிவுரைகள் பின்பற்றப்படும் என 2 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான கொள்முதல்களுக்கு பிறகு புதிய ஆர்டர்களை அந்த நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.