Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கையை பிசையும் டிரம்ப்

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஐந்து வாரங்களுக்கும் மேலாக நடத்தும் போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் திக்குமுக்காடி போய் இருக்கிறார். அவரும் தினம் தினம் பல்வேறு கெடுகளை விதித்தும் ஈரான் அடிபணிய மறுக்கிறது. இத்தனைக்கும் வெளிப்படையாக நடக்கும் இந்த வேண்டுகோள், மிரட்டல்கள் ஈரான் முன் எந்தவித பயத்தையோ அல்லது பின்விளைவுகளையோ ஏற்படுத்தவில்லை என்பது தான் அதிர்ச்சி.

இப்படி ஒரு நெருக்கடி நிலை அமெரிக்காவுக்கு ஏற்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பாக்தாத் பதுங்கு குழியில் இருந்து சதாம் உசேனை பிடித்தது முதல் மெக்சிகோ அதிபர் கைது வரை அமெரிக்கா திட்டமிட்டது தான் இந்த உலகில் நடந்தது. ஏன் எந்தவித மத்தியஸ்தத்திற்கும் ஒத்துக்கொள்ளாத இந்தியா, பாகிஸ்தான் போரையே நான் தான் நிறுத்தினேன் என்று அதிபர் டிரம்ப் இப்போது வரைக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்படி, இப்படி மழுப்பல் பதில் தான் இந்தியா தரப்பில் அளிக்கப்படுகிறதே தவிர, இருநாடுகள் இடையிலான போரில் யாரும் தலையிடவில்லை என்று பகிரங்கமாக சொல்ல பிரதமர் மோடி தயாராக இல்லை. இதுதான் உண்மை, இப்படித்தான் இருக்கிறது யதார்த்தம்.

ஆனால் ஈரான் போர் வேறு விதமாக சென்று கொண்டு இருக்கிறது. உலகமே மிரண்டு கிடக்கும் மிதப்பில் இருந்தார் டிரம்ப். ஈரான் ஓங்கி தலையில் ஒரு குட்டு வைத்து இருக்கிறது. முதன்முறையாக தலையில் பலத்த அடி வாங்கியதால் கொஞ்சம் கிறுகிறுத்து போய் இருக்கிறார் டிரம்ப். இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் நான்கு மணிநேரத்துக்குள், ஈரானில் உள்ள ஒவ்வொரு பாலமும் மின் நிலையமும், முற்றிலுமாக அழிக்கப்படும். இன்று இரவுக்குள் ஒட்டுமொத்த ஈரானும் இன்று அழிக்கப்படும். அதை நான் விரும்பவில்லை. இருப்பினும் அது நிகழும் போல் உள்ளது’ என்று எச்சரித்து உள்ளார்.

காலக்கெடு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டிரம்பின் நிபந்தனைக்கு இணங்க ஈரான் தயாராக இருப்பதாகக் காட்டும் அறிகுறிகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஈரான் தற்காலிகப் போர் நிறுத்தத்தை நிராகரித்ததுடன், தங்களுக்கான கோரிக்கைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். இதனால் இன்னும் அதிர்ச்சி அடைந்துள்ளது அமெரிக்கா. எத்தனை தாக்குதல் நடத்தினாலும் ஈரான் அசைந்து கொடுக்காதது அமெரிக்காவுக்கு பேரதிர்ச்சி. டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகள் ஆகியவற்றைக் கொண்டு, ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்கள் செல்வதை தடுக்கும் திறன் ஈரானின் மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. எனவே ஈரானை பகைத்துக்கொண்டு, அமெரிக்காவுக்கு உதவ யாரும் தற்போது தயாராக இல்லை. இதனால் இஸ்ரேலை தவிர அமெரிக்காவுக்கு பெரிய உதவி எதுவும் உலக நாடுகளிடம் இருந்து கிடைக்கவில்லை. எனவே தன்னந்தனியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் அமெரிக்காவுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இப்போது ஈரானை தாக்குவதை விட ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது அமெரிக்காவுக்கு முக்கியமாக படுகிறது. அதற்கும் ஈரான் சம்மதிக்க மறுக்கிறது. இதுவரை அமெரிக்காவின் நிர்பந்தத்தை யாரும் ஏற்க மறுத்தது இல்லை. அதுவும் டிரம்ப் சொன்னால் பிரதமர் மோடியே கேட்டுக்கொள்கிறார் என்று அமெரிக்கா வரை பேச்சு அடிபடும் நிலையில், ஈரான் அசைய மறுப்பது டிரம்ப்பை கையை பிசையும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. என்ன செய்யப்போகிறார் டிரம்ப் என்பது இன்று தெரிந்து விடும்.