Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சி ஜிஹெச்சில் நர்ஸ் வேடத்தில் ஆண் குழந்தையை கடத்திய பெண்: 7 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

திருச்சி: திருச்சி ஜிஹெச்சில் நர்ஸ் வேடத்தில் ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் 7 மணி நேரத்தில் பிடித்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா(23). திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 11ம்தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு உதவியாக உறவுக்கார பெண் ஒருவர் இருந்தார். அவர் நேற்று காலை வெளியில் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் பக்கத்து பெட்டில் இருந்த மீனாட்சி(45) என்பவர் குழந்தைக்கு தடுப்பூசி போட டாக்டர் அழைக்கிறார். என்னிடம் குழந்தையை கொடுங்க. தடுப்பூசி போட்டு வருகிறேன் என கூறி சுகன்யாவிடமிருந்து குழந்தையை வாங்கி சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா, தடுப்பூசி செலுத்தும் இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு மீனாட்சியை காணவில்லை. அவர் குழந்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் சுகன்யா கதறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக சுகன்யா அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து பிரசவ வார்டில் உள்ள பதிவேட்டை போலீசார் சோதனையிட்டபோது அதில் மீனாட்சி என்ற பெயரே பதிவாகவில்லை. இதனால் அவர் குழந்தை கடத்த திட்டமிட்டு 2 நாட்களுக்கு முன் பிரசவ வார்டுக்கு வந்ததும், காலியாக இருந்த சுகன்யாவின் பெட்டுக்கு அடுத்த பெட்டில் படுத்துக்கொண்டு அவரிடம் நன்றாக பேச்சுக்கொடுத்து பழகியதும், சுகன்யாவின் உறவினர் வெளியில் சென்ற நேரம் பார்த்து குழந்தையை கடத்தி சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் குழந்தையை கடத்திச் சென்ற பெண் உருவம் பதிவாகியுள்ளது. அதை வைத்து அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிரமாக விசாரணை நடத்தினர். பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து சேலம் தம்மம்பட்டியை சேர்ந்த மீனாட்சி என்பவரை 1 மணி நேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டனர். விசாரணையில், செவிலியர் உடை அணிந்து தடுப்பூசி போடுவதாக கூறி குழந்தையை எடுத்து சென்றதும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் எடுத்து சென்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.