Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சி ரயில்வே மண்டல அலுவலகத்திற்கு ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர்! - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

திருச்சி ரயில்வே நுழைவாயிலிக்கு கர்த்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் சூட்டியிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருப்பது, ஒன்றிய பாஜக அரசின் தொடர்ச்சியான இந்தித் திணிப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு வெளிப்பாடாகும். ஒரு ஜனநாயக நாட்டில் நிர்வாகம் என்பது மக்கள் பேசும் மொழியிலேயே அமைய வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்திற்கு இந்தச் செயல் எதிரானது.

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில், தமிழ் மண்ணின் மைந்தர்களுக்குப் புரியாத ‘கர்தவ்ய த்வார்’ என்ற வடமொழிச் சொல்லைத் திணிப்பது நிர்வாக வசதிக்காக அல்ல; மாறாக, இது தமிழ் மக்களின் உணர்வுகளைத் திட்டமிட்டுச் சீண்டும் ஒரு கலாச்சாரப் போர்முறையாகும்.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் தமிழுக்கு வழங்கப்பட்டு வந்த முன்னுரிமையைச் சிதைக்கும் வகையில், பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துகளுக்கு முதலிடம் கொடுப்பதும், இடமாற்றம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. நிலையங்களின் முகப்பு மற்றும் நடைமேடைகளில் தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது அலுவலக வாயில்களிலும் வடமொழியைத் திணிப்பது, ரயில்வே துறையை முழுமையாக இந்தி மயமாக்கும் உள்நோக்கத்தையே காட்டுகிறது.

ஒன்றிய பாஜக அரசு தற்போது ‘மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று’ என்ற புதிய தந்திரத்தைக் கையாண்டு வருகிறது. அதாவது, இந்திச் சொற்களையே தமிழ் மற்றும் ஆங்கில வரிவடிவங்களில் (Transliteration) எழுதி வைத்து, அது எல்லா மொழிகளிலும் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்குகிறது.

ஏற்கனவே ‘பவிஷ்ய நிதி பவன்’, ‘ஜல் சக்தி’ போன்ற பெயர்கள் மூலம் இந்தி ஊடுருவலைச் செய்தவர்கள், இப்போது ரயில்வே துறையிலும் அதையே தொடர்கின்றனர். குறிப்பாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை ‘விக்சித் பாரத் - கியாரன்டி ஃபார் ரோஸ்கர் அண்ட் அஜீவிகா மிஷன்’ என மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தித் திணிப்பாகும்.

வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத் என ரயில்வே திட்டங்களுக்கும்; ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கும் இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவது பாஜக அரசின் ஒருதலைப்பட்சமான போக்கைக் காட்டுகிறது. நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றை மொழிக் கலாச்சாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் இச்செயல் கண்டிக்கத்தக்கது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும்.

தமிழக முதல்வர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளது போல, தமிழர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் இத்தகையச் செயல்களை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். ‘கர்தவ்ய த்வார்’ போன்ற வாயில் நுழையாத பெயர்களை அகற்றிவிட்டு, எளிய தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும். பெயர் பலகைகளில் தமிழுக்கான முன்னுரிமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் அரசு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் செயல்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.