திருச்சி: தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்களே உள்ளன. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தநிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இங்கு போட்டியிட்டால் விஜய்க்கு வெற்றி நிச்சயம் என, அவரின் வியூக வகுப்பாளர் ஒருவர் எடுத்த சர்வே மூலம் தெரியவந்துள்ளதாம்.
இதுபற்றி தவெக வட்டாரத்தில் விசாரித்த போது, விஜய் போட்டியிடுவதற்காக திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு என 3 சாதகமான தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகளவில் உள்ளது. இது விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
திருச்சி கிழக்கை மனதில் வைத்து தான், தனது முதல் பிரசாரத்தை விஜய் திருச்சியில் துவக்கினார். அவர் பிரசாரம் செய்த காந்தி மார்க்கெட் மரக்கடையும் கிழக்கு தொகுதியில் தான் வருகிறது. திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. ஆனால் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை விஜய் தான் முடிவு செய்வார் என்றனர்.


