Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முத்தரப்பு மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்

கொழும்பு: இலங்கையில் இன்று நடக்கும் முத்தரப்பு மகளிர் ஒரு நாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன. இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா பெண்கள் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை ரவுண்ட் ராபின் முறையில் மோதின. அதனால் ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்களில் எதிர்கொண்டன. அவற்றில் இந்திய பெண்கள் அணி 3 ஆட்டங்களில் வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றது.

இலங்கை 2 ஆட்டங்களில் வென்று 2வது இடத்தை பிடித்தது. இலங்கையை மட்டும் கடைசி ஒரு போட்டியில் வீழ்த்திய தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி கடைசி இடத்தை பிடித்தது. முதல் 2 இடங்களை பிடித்த ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா, சமரி அதபட்டு தலைமையிலா இலங்கை பெண்கள் அணியும் இன்று இறுதி ஆட்டத்தில் களம் காண உள்ளன. லீக் சுற்றில் 2 ஆட்டங்களில் இந்த அணிகள் 2 முறை மோதின. முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2வது முறையாக மோதிய ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

எனவே இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கை ஒங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கேற்ப இந்திய வீராங்கனைகள் இன்று அதிரடி காட்டக் கூடும். சொந்த களத்தில் விளையாடுவது மட்டுமே இலங்கைக்கு சாதகமான வாய்ப்பாக அமையலாம். இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் இந்தியா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அந்த முன்னிலையை தொடர இந்தியாவும், குறைக்க இலங்கையும் முனைப்பு காட்டும் என்பதால் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

அணி விவரம்

இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமீமா ரோட்ரிக்ஸ், யாஷ்டிகா பாட்டீயா, காஷ்வீ கவுதம், ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், அமன்ஜோத் கவுர், ஸ்நேஹ ராணா, அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா,  சரணி, சுச்சி உபாத்யாய்

இலங்கை: சமரி அதபட்டு (கேப்டன்), கவிஷா தில்ஹரி, இனேஷி பிரியதர்ஷனி, விஸ்மி குணரத்னே, ஹன்சிமா கருணரத்னே, சுகந்திகா குமாரி, மல்கி மதாரா, மனுதி நானயக்காரா, ஹாசினி பெரேரா, பியூமி வத்சலா, இனோகா ரணவீரா, ஹர்ஷிதா சமரவிக்ரமா, அனுஷ்கா சஞ்சீவினி, ராஷ்மிகா சேவ்வாண்டி, நிலாக்‌ஷிகா சில்வா, டெவ்மி விஹங்கா