முப்படைகளின் திரிசூல் பயிற்சி நிறைவு ஐஎன்எஸ் விக்ராந்தில் சென்று முப்படை கமாண்டர்கள் ஆய்வு
போர்பந்தர்: முப்படைகளின் திரிசூல் பயிற்சியை விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் சென்று முப்படைகளின் தளபதிகளும் ஆய்வு செய்தனர். இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து ஒரே நேரத்தில் திரிசூல் என்ற பெயரில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டன. தார் பாலைவனம் முதல் கட்சி பகுதி வரை முப்படைகளும் கடந்த இரண்டு வாரங்களாக இந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.30ஆயிரம் ராணுவ வீரர்கள், ஏராளமான போர் விமானங்கள், கடற்படையின் சுமார் 25கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இதில் பங்கேற்றன.
சவுராஷ்டிரா கடற்கரையில் நேற்று இந்த கூட்டுப்பயிற்சியானது முடிவடைந்தது. இந்த பயிற்சியானது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் முழு அளவிலான நிலம், கடல், வான் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துகின்றது. மேலும் பல களங்களில் ஆயுதப்படைகளின் சக்தி, திறனை அடிக்கோடிட்டு காட்டுகின்றது. திரிசூல் பயிற்சியானது கூட்டுத்தன்மை, ஆத்மநிர்பர் மற்றும் புதுமை பற்றிய ஆயுதப்படைகளின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக உள்ளது. மின்னணு பேர் முதல் டிரோன் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட களங்களை இந்த பயிற்சி உள்ளடக்கியது. இறுதி பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக குஜராத்தின் போர்பந்தரில் மேடை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் ஒத்திகை நடத்தப்பட்டது.
ராணுவத்தின் தெற்கு கமாண்ட், கடற்படையின் மேற்கு கடற்படை கமாண்ட் பிரிவு, விமானப்படையின் தென்மேற்கு கமாண்ட் பிரிவு ஆகியவற்றின் தலைவர்கள் கூட்டாக கள நடவடிக்கைகளை கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் சென்று ஆய்வு செய்தனர். புதிய ஆயுதங்கள், ராணுவ உபகரணங்கள் மற்றும் நடைமுறைகள் இந்த பயிற்சியின்போது சோதிக்கப்பட்டன மற்றும் திரிசூல் பயிற்சி செயல்பாடு அவற்றை உறுதிப்படுத்தியதாகவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் சேத் தெரிவித்துள்ளார்.