Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் செய்வதற்கும் காலிப்பணியிடம் உயர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை: குரூப் 4 காலி பணியிட எண்ணிக்கை மேலும் அதிகரிக்காது

சென்னை: எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் செய்வதற்கும் காலி பணியிடம் உயர்விற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 9491 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது.

தொடர்ந்து கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள், தங்கள் சான்றிதழ்களை கடந்த 9ம் தேதி முதல் பதிவேற்றம் செய்து வருகின்றனர். வருகிற 21ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டின்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தேர்வர்கள், “ஒரு முறை பதிவு தளத்தின் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தபின், மீண்டும் திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யலாமா? என்று டிஎன்பிஎஸ்சிக்கு கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு டிஎன்பிஎஸ்சி, “ஒரு முறை பதிவு தளத்தின் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தபின், சான்றிதழை தவறாக பதிவேற்றம் செய்து இருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டிருந்தோலோ, சரியான சான்றிதழை வருகிற 21ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். தேர்வர்கள் இறுதி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று பதில் அளித்துள்ளது.

மேலும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படுமா? என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு டிஎன்பிஎஸ்சி, “அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6244லிருந்து 3247 காலி பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது 9491 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட காலி பணியிடங்களுக்கு துறை, அலகு வரியான பகிர்மான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படமாட்டாது” என்று பதில் அளித்துள்ளது.

மேலும் டிஎன்பிஎஸ்சி, “எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் செய்தால், தேர்வாணையம் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது தவறான தகவல். தேர்வாணையம் தேர்வர்களின் நலன் கருதி, ஒவ்வொரு அறிவிக்கையிலும் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கையில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பு, கூடுதல் காலிபணியிடங்களை சேர்த்து அறிவித்து வருகிறது. எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் செய்வதற்கும், காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்விற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று பதில் அளித்துள்ளது.