சென்னை போக்குவரத்து கழகத்திற்கு ரூ.500 கோடியில் ஏ.சி. வசதியுடன் 1000 மின்சார பஸ்கள் கொள்முதல்: தமிழக போக்குவரத்து கழகத்திற்கு ரூ.13,561 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகங்களின் வாகன தொகுப்பை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, மொத்த செலவு ஒப்பந்த முறையின் கீழ் மின்சார பேருந்துகளை அரசு இயக்கவுள்ளது. நடப்பு நிதியாண்டில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு குளிர்சாதன வசதிகளை கொண்ட 1000 புதிய மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
பேருந்து பணிமனைகளில் மின்சார பேருந்துகளுக்கான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக ரூ.7,675 கோடியும், செயல்திறன் இடைவெளி நிதியுதவியாக ரூ.2,650 கோடியும், பங்கு மூலதன உதவியாக ரூ.1005 கோடியும் திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி போக்குவரத்து துறைக்கு ரூ.13,561 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
