Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் எந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தாலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு துரோகிகளை வீழ்த்த வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுரை

சென்னை: தமிழகத்தில் எந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தாலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு துரோகிகளை வீழ்த்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு அந்த கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோரும் விலகி தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதுவரை, 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். 5 நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வேலூர் மாவட்ட அதிமுகவினருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய அவர் நேற்று திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.

இந்த ஆலோசனையின்போது எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசியதாவது: அதிமுக கட்சியில் இருந்து விலகி செல்பவர்கள் பற்றி கவலைப்படாதீர்கள். இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை மேலும் அதிகளவில் கட்சியில் சேர்த்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும். ஆளும் கட்சியின் குறைகள், கடந்தகால அதிமுக ஆட்சியின் சாதனைகள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தாலும், துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது. தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு துரோகிகளை வீழ்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளையும் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்ற விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆலோசனையின்போது விஜயபாஸ்கருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பழனிவேல் மற்றும் பல்வேறு நிர்வாகிகளும் பங்கேற்றனர். அவர்களும் விராலிமலை தொகுதியில் நிச்சயம் இரட்டை இலையை வெற்றி பெற செய்வோம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்தனர்.