Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

‘துரோகி’, ‘தேச துரோகி’ என மாறி மாறி ராகுல் காந்தி, அமைச்சர் பிட்டு இடையே வார்த்தை மோதல்: நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை ‘துரோகி நண்பரே’ என ராகுல் காந்தி அழைத்ததால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததை கண்டித்து அமளி செய்த காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் உட்பட எதிர்க்கட்சியை சேர்ந்த 8 எம்பிக்கள் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் வரை அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களுடன் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் போராட்டத்தில் பங்கேற்று நாடாளுமன்ற படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் பலர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். அப்போது அங்கு வந்த ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, சஸ்பெண்ட் எம்பிக்களை பார்த்து, ‘‘ஏதோ போரில் வெற்றி பெற்றதைப் போல இங்கே அமர்ந்திருக்கிறார்கள்’’ என்றார்.

அதற்கு ராகுல் காந்தி, பிட்டுவை பார்த்து, ‘‘இதோ ஒரு துரோகி பக்கத்திலேயே நடந்து செல்கிறார்’’ என்று கூறி விட்டு பிட்டுவை நோக்கி கை குலுக்குவதற்காக கையை நீட்டி, ‘‘வணக்கம் ப்ரோ, என் துரோகி நண்பரே, கவலைப்படாதீங்க, நீங்க மறுபடியும் வருவீர்கள் (காங்கிரசுக்கு)’’ என்றார். அதற்கு பிட்டு கை குலுக்க மறுத்து விட்டு, ராகுல் காந்தியையும் காங்கிரஸ் எம்பிக்களையும் பார்த்து ‘‘தேச துரோகி’’ என்று கூறினார்.

பதிலுக்கு அவர்கள் ‘சரண்டர், சரண்டர்’ என கோஷமிட்டனர். பின்னர் பிட்டு அளித்த பேட்டியில், சோனியாவின் மோசமான மகன் ராகுல் என்றும், ‘‘சீக்கியர்களை கொன்று, குருத்வாராக்களை இடித்த காந்தி குடும்ப வாரிசுடன் இந்த சர்தார் ஒருபோதும் கைகோர்க்க மாட்டான்’’ என்றும் கூறினார்.

* முழு சீக்கிய சமூகமும் வேதனையில் உள்ளது

பாஜ தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘‘பிட்டு காங்கிரசிலிருந்து விலகிய ஒரே காரணத்திற்காகவே காந்தி அவரை துரோகி என்று அழைத்துள்ளார். அவரது தாத்தா, பஞ்சாப் முதல்வராக இருந்த சர்தார் பியாந்த் சிங், ஒரு கொலையாளியின் குண்டுக்கு பலியானார். அவரையா நீங்கள் தேசத்துரோகி என்று அழைக்கிறீர்கள்?’’ என்றார். பாஜவின் மற்றொரு தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, ‘‘பிட்டுவை துரோகி என்று அழைத்ததால் முழு சீக்கிய சமூகமும் மிகுந்த வேதனை அடைந்துள்ளது’’ என்றார்.