Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை: சென்னை ரயில்வே நிர்வாகம் கடும் எச்சரிக்கை!

சென்னை: பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பலர் அறியாமலோ அல்லது கவனக்குறைவாகவோ பட்டாசுகளைத் தங்கள் உடமைகளில் எடுத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இத்தகைய செயல்கள் ரயிலில் பயணம் செய்யும் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.

இந்திய ரயில்வே சட்டம், 1989-ன் பிரிவுகளின்படி, ரயில்களில் பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்களைக் கொண்டு செல்வது சட்டவிரோதமாகும்.இந்த விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

ரயில்களில் ஏற்படும் சிறிய தீப்பொறி கூட பெரும் விபத்துகளுக்கும், உயிர்ச்சேதத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், சென்னை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ரயில்வே துறையின் வேண்டுகோள்:

பயணிகள் அனைவரும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் யாரும் பட்டாசுகளுடன் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.