Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயிற்சி விமானத்தை சாலையில் தரையிறக்கியது ஏன்? விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை: கன்டெய்னரில் விமானம் சேலத்துக்கு எடுத்து செல்லப்பட்டது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பயிற்சி விமானத்தை சாலையில் தரையிறக்கியது ஏன் என்பது பற்றி சென்னை விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே தரையிறக்கப்பட்ட விமானம் இன்று அதிகாலை கன்டெய்னரில் சேலத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. சேலத்தில் ஈக்வி என்ற தனியார் விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிறிய ரக விமானம் மூலம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த செஸ்னா172 ரக பயிற்சி விமானம் ஒன்று நேற்று காலை சேலத்திலிருந்து காரைக்குடிக்கு புறப்பட்டது. பயிற்சியாளரான விமானி ராகுல் ரமேஷ்(30), கேரளாவை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் ஹசீர்(28) என்பவருக்கு பயிற்சி அளித்தார்.

விமானம் காரைக்குடி சென்று விட்டு சேலத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் தளத்தை கடந்த போது அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் காலை 11.40 மணி அளவில் வானில் சிறிது நேரம் வட்டமடித்தபடி இருந்தது. அப்போது மலையில் லேசாக உரசியதால் இன்ஜின் கவர் பெயர்ந்து காட்டுக்குள் விழுந்தது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் விமான நிலையத்துக்கு செல்ல 30 கி.மீ. தூரம் இருந்ததால் அங்கு செல்வது சாத்தியமில்லை என கருதி உடனடியாக திருச்சிபுதுகை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே கொத்தமங்கலப்பட்டி அம்மாசத்திரம் இடைபட்ட பகுதியில் 12.45 மணிக்கு விமானத்தை அவர் சாலையில் மெதுவாக தரையிறக்கினார். விமானம் சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் ஓடி அம்மாசத்திரம் சாலையில் பயங்கர சத்தத்துடன் நின்றது. உடனே விமானத்தில் இருந்த 2 பேரும் இறங்கினர். மலையில் உரசியதில் விமானத்தின் முன்பகுதி சிறிது சேதமடைந்திருந்தது. பொதுமக்கள், விமானிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தகவலறிந்து வந்த போலீசார், வருவாய் துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தினர். விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் கிடந்த விமானத்தின் இன்ஜின் கவரை மீட்டனர்.

திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜூ தலைமையில் தொழில்நுட்ப பிரிவு, மீட்பு பிரிவுகளை சேர்ந்த 40 பேர் வந்து ஆய்வு செய்தனர். இதற்கிடையே சென்னை விமான போக்குவரத்து இயக்குனரக உதவி இயக்குனர் ஜான் பிரதீப் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் மாலை திருச்சி வந்தனர். அவர்கள் இரவு 7 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்து விமானத்தை பார்வையிட்டனர். பின்னர் விமானி ராகுல், ஹசீரிடம் விசாரித்தனர்.  இதையடுத்து விமானத்தை மீட்டு கொண்டுசெல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

1000 கிலோ எடையுள்ள அந்த விமானத்தில் எரிபொருள் கொள்ளளவு 200 லிட்டர் ஆகும். இதன் மூலம் 6 மணி நேரம் விமானத்தை இயக்க முடியும். இந்த விமானத்தின் இரு இறக்கைகளிலும் ஒருபுறம் 100 லிட்டர், மற்றொரு புறம் 70 லிட்டர் என மொத்தம் 170 லிட்டர் எரிபொருள் இருந்தது. இதிலிருந்து எரிபொருள் முழுவதையும் அகற்றிவிட்டு அவற்றை கழற்றி தனியாக பிரிக்கும் பணி இரவு 8 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து 10 மணிக்கு மேல் கிரேன் வரவழைக்கப்பட்டது. 14 மணி நேரத்துக்கு பின்னர் விமானம் கன்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் சேலத்துக்கு புறப்பட்டது.

விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டபோது பேசிய உரையாடலை ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின்னர் உண்மை தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜூ அளித்த பேட்டி: விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது எப்படி என விமான நிலைய இயக்குனரக அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்திற்கு உரிமம் உள்ளதா? முறையாக பாதுகாப்பு முறைகளை கையாண்டு தான் இந்த விமானம் இயக்கப்பட்டதா? விமானம் எடுக்கும் பொழுது அனைத்து பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டதா? விமானம் எதனால் உடனடியாக சாலையில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்ன என்றெல்லாம் விசாரணையில் தெரியவரும் என்றார்.