பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என அறிவிப்பு: சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இன்று தண்டனை விபரம்
சென்னை: சென்னை அண்ணாநகரில் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்புக் கலை பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் கடந்த 2014ல் தனது பயிற்சி பள்ளி மாணவிகளை நாமக்கல்லில் நடந்த போட்டியில் பங்குபெறுவதற்காக அழைத்து சென்றுள்ளார். போட்டி முடித்து வரும்போது தனது காரில் பயிற்சி பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், பயந்துபோன அந்த மாணவி காரிலிருந்து இறங்கி ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார். அவரை தொடந்து ரயிலில் ஏறிய கெபிராஜ் மாணவியை மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த 2021ல் கெபிராஜ் மீது பாலியல் தொந்தரவு, மிரட்டல் பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2021 மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கெபிராஜ், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மேலும் சில மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் 2021 ஜூன் 11ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் 32 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் காரத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.