பல்லியா: உத்தரப்பிரதேசத்தில் ரயில் சிக்னல் லைட்டை துணியால் மூடி மறைத்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத்தில் இருந்து பீகாரின் சப்ராவிற்கு உத்சர்க் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ரியோட்டி ரயில்நிலையத்தை நேற்று முன்தினம் காலை ரயில் அடைந்தது. பின்னர் ரயில் புறப்படத் தயாரானது. ஆனால் ரயிலுக்கான பச்சை சிக்னல் கிடைக்காமல் சிவப்பு சிக்னலே நீடித்தது. இது குறித்து ரயில் ஓட்டுனர் ரயில் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டபோது பச்சை சிக்னல் விழுந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது சிக்னல் விளக்கின்மீது மர்மநபர்கள் சிவப்பு துணியை கட்டி மூடிவைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிறிது நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச்சென்றது. இது குறித்து ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் புகாரின்பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


