திருவொற்றியூர்: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் தவறவிட்ட நகை, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகையை நேர்மையாக ஒப்படைந்த ரயில்வே ஊழியரை பாராட்டிய பயணி அவருக்கு நன்றி தெரிவித்தார். பெங்களூருவில் இருந்து கடந்த மாதம் 29ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், நடைமேடை ஒன்றில் பயணிகளை இறக்கிவிட்டு சுத்தம் செய்யப்படுவதற்காக புறப்பட்டுச் சென்றது. ரயிலில் ஊழியர் கார்த்தி என்பவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது இ-1 கோச்சில் இருக்கை எண் 12ல் ஹேண்ட் பேக் ஒன்று இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் தங்க நகை இருப்பது தெரியவந்தது. அதனை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அதனைப் பெற்றுக்கொண்டு அந்த நகை யாருடையது என விசாரணை நடத்தினர். இதனிடையே, பல்லாவரம் கலோரியா ரெசிடெண்ட் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (51) என்பவர், சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தன்னுடைய மனைவியுடன் பெங்களூருவில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்ததாகவும், ரயிலில் இருந்து இறங்கியபோது தனது மனைவி ஹேண்ட் பேக்கை மறந்துவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய அடையாளங்கள் பொருந்திய காரணத்தால் ரயில்வே போலீசார் நகையை அவரிடம் ஒப்படைத்தனர். அதில் 2 வளையல்கள், ஒரு செட்டு கம்மல், ஆரம் ஒன்று, நெக்லஸ் ஒன்று என மொத்தம் 9 சவரன் தங்க நகை இருந்தது. தொடர்ந்து நகையை பெற்றுக்கொண்ட ஸ்ரீகாந்த், ரயில்வே போலீசாருக்கும், ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொடுத்த ஊழியருக்கும் நன்றி தெரிவித்தார்.


