வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று டிரம்ப் மிரட்டலா? வெளியுறவுத்துறை மறுப்பு
அணு ஆயுதப் போர் குறித்த டிரம்பின் ஊகங்கள் எங்களுக்கு தெரியாது. ஆனால் பாகிஸ்தானின் தேசிய கட்டளை ஆணையம் மே 10 அன்று கூடும் என்று சில தகவல்கள் வந்தன. ஆனால் இதை அவர்கள் பின்னர் மறுத்தனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரே அணு ஆயுதக் கோணத்தை தனது பதிவுகளில் மறுத்துள்ளார். அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியவோ அல்லது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதைத் தூண்டிவிடவோ அனுமதிக்க மாட்டோம் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுடனான உரையாடல்களில், இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் பங்கேற்பது அவர்களின் சொந்த பிராந்தியத்தில் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நாங்கள் எச்சரித்தோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைக்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ளாவிட்டால் வர்த்தகம் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டினாரா? என்று கேட்டதற்கு கடந்த 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியது முதல் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 10ம் தேதி வரை அமெரிக்க தலைவர்களுடன் இந்திய தலைவர்கள் கள நிலவரம் குறித்து பேசி வந்தனர். இதில், வர்த்தகம் குறித்த எதுவும் பேசப்படவில்லை. ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக சீனா மற்றும் துருக்கியின் வான் பாதுகாப்பு ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்த தளவாடங்கள் பாக்.கிற்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியுள்ளது.