Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே ஒப்பந்தம்; பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து: உஸ்பெக்கில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை

தாஷ்கண்ட்: வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. உஸ்பெகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக அந்த நாட்டிற்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார். தாஷ்கண்ட் வந்திறங்கிய பிரதமர் மோடியை அதிபர் மிர்ஸியோயே வரவேற்றார்.

அதிபருடன் சேர்ந்து சுதந்திர தின நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின் தாஷ்கண்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் மோடி கலந்துரையாடினார். இரவில் ஷவ்கத் மிர்ஸியோயே அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில்,இருதரப்புக்கும் இடையே தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நேற்று நடந்தது. இதில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு தரப்பினரும் ஒப்பு கொண்டனர்.

அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, கலாச்சாரம், உயர் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, ஆயுர்வேதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அகழ்வாராய்ச்சி, சுற்றுலா, கனிம வளம், புவியியல் ஆராய்ச்சி தொடர்பாக இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக நீண்டகால அடிப்படையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க உஸ்பெகிஸ்தானுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் தொடக்க உரையாற்றிய மோடி இந்தியில் பேசுகையில், நமது உத்திசார் கூட்டாண்மையின் 15வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகிறோம். இந்தச் சிறப்புமிக்க தருணத்தில், நமது உறவுகளை ஒரு விரிவான உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கட்டமைப்பிற்குள் உறுதியான இலக்குகளை நிர்ணயித்து நாம் முன்னோக்கிச் செல்வோம். அதிபருடனான இரவு விருந்தின்போது இரு தரப்பினரும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. நெருங்கிய ஒருங்கிணைப்பின் மூலம் எங்கள் ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களுக்கும் வழிகாட்டுதலை வழங்க, வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை நாங்கள் அமைப்போம். யுரேனியம் விநியோகத்திற்கான ஒரு நீண்டகால ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

* 5 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கு

வரும் 2030-ம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இரு தரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள இரு தரப்பினரும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக மோடி தெரிவித்தார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் அளவு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது.

* மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது

பிரதமர் மோடிக்கு , ​அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் நாட்டின் உயரிய அரசு விருதான “ஓலிய தராஜலி தோஸ்த்லிக்” விருதை வழங்கினார். தாஷ்கண்டில் இரு தலைவர்களும் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியபோது, ​​பிரதமர் மோடிக்கு இந்த மதிப்புமிக்க கவுரவம் வழங்கப்பட்டது .

இது குறித்து மோடி கூறுகையில், ஒலிய தராஜலி தோஸ்த்லிக் விருதைப் பெறுவதில் பெருமை கொள்கிறேன். இதை இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான நீடித்த பந்தத்திற்கு அர்ப்பணிக்கிறேன்.விருதின் பெயரே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் அடித்தளத்தைப் பிரதிபலிக்கிறது. ‘தோஸ்த்லிக்’ என்பது நட்பு என்று பொருள்படும். நண்பன் என்ற பொருள்படும் ‘தோஸ்த்’ என்ற சொல்லும் இந்தியர்களுக்குப் பரிச்சயமானது என்று குறிப்பிட்டார்.

* யோகாவில் பங்கேற்பு

தாஷ்கண்டில் நடந்த யோகா நிகழ்ச்சியை மோடி பார்வையிட்டார். அங்கு யோகா பயிற்சி செய்தவர்களுடன் அவர் பேசினார்.யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டா சமூகவலைதளத்தில் வெளியிட்டு மோடி பேசுகையில் உஸ்பெகிஸ்தானை யோகாவுடன் இணைத்ததற்காக என் நண்பர் அதிபர் ஷவ்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.