Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

உழவுப்பணிகளுக்காக டிராக்டர் இயக்க இலவச பயிற்சி!

விவசாயக் கூலித்தொழிலாளர்கள் தட்டுப்பாடு, வருவாய்க்கு மிஞ்சிய செலவினம் போன்ற காரணங்களால் நாற்று நடுதல் முதலான அனைத்து பணிகளுக்கும் நவீன கருவிகளின் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் விவசாயத்தைப் பொறுத்தவரை நவீன கருவிகளின் தேவை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. முன்பெல்லாம் அறுவடை காலங்களில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மூலம் அறுவடைப்பணி மேற்கொள்ளப்படும். இதனால் அறுவடை காலதாமதம் ஆகும். ஆனால் தற்போது அறுவடை செய்யும் பணிக்கு போதிய ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் அனைத்துப் பகுதிகளிலும் அறுவடை இயந்திரங்கள் மூலமே அறுவடை நடந்து வருகிறது. இதன்மூலம் எளிதில் அறுவடை முடிந்து விடுகிறது. இதனால் வேளாண் பணிகளில் இயந்திரங்களின் பயன்பாடு தற்போதைய காலத்தில் தவிர்க்க முடியாததாகி விட்டது.

அந்த வகையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் டிராக்டர் இயந்திரங்களை வேளாண் இணைப்புக் கருவிகளுடன் இயக்க 27 நாட்கள் உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் பயிற்சியாளர்களுக்கு டிராக்டர் இன்ஜின் செயல்பாடு, பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இந்த பயிற்சியின் முடிவில் தகுதியான பயிற்சியாளர்களுக்கு அரசு சான்றிதழும் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சிக்கு கட்டணம் எதுவும் கிடையாது. பயிற்சி காலம் 27 வேலை நாட்கள் ஆகும். இதில் டிராக்டர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பயிற்சி அளிக்கப்படுவதுடன் டிராக்டர் ஓட்டுநருக்கான உரிமமும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் பெற்றுத் தரப்படுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இதற்கான கல்வித்தகுதி எதுவும் கிடையாது. வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.இந்த பயிற்சி பெற விரும்புபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் அந்தந்த மாவட்டங்களில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுகலாம்.

வேளாண்மை துறையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில், ஒரு பைசா செலவு ஏதுமின்றி வேளாண்மை பொறியியல் துறை டிராக்டர் ஓட்டுவதற்கான பயிற்சியும் அளித்து, அதற்கான ஓட்டுநர் உரிமமும் பெற்றுத் தருகிறது. இதன் மூலம் சொந்த டிராக்டர் வாங்க வேண்டும் என்ற ஆர்வமுடைய விவசாயிகள் இந்த பயிற்சி பெற்று உரிமமும் பெறுவதன் மூலம் தங்கள் நிலத்திற்கு டிராக்டர் பயன்படுத்துவதுடன், அதன் மூலம் வருமானமும் பெற முடியும் என நெல்லை வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ராம விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.