Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவியருவிக்கு நீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கிறது: அருவிக்கு செல்லும் வழி அடைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த கவியருவியில் கடந்த 4 மாதத்திற்கு மேலாக நீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிக்கிறது. இதனால் கவியருவியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் திரும்பி செல்கின்றனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்வது வழக்கம். மழை இருக்கும் காலகட்டத்தில் அருவியில் தண்ணீர் அதிகளவில் வருவதால்,அந்நேரத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.கடந்த 2024ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை,அதன்பின் வடகிழக்கு பருவமழை என தொடர்ந்திருந்ததால்,இந்த ஆண்டில் ஜனவரி மாதம் வரை கவியருவியில் தண்ணீர் கொட்டியது. அதன்பின் வெயிலின் தாக்கம் அதிகரித்து மழையில்லாததால்,பிப்ரவரி மாதத்தில் இருந்து நீர் வரத்து மிகவும் குறைய துவங்கியதுடன், சில நாட்களில் கவியருவி வெறும் பாறையாக வறண்டு காணப்பட்டது. இதையடுத்து வறட்சியின் காரணமாக, கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

தற்போது, வனத்தில் கோடை மழை அவ்வப்போது சாரலாக இருந்தாலும்,கவியருவியில் தண்ணீர் வரத்தில்லாமல் வறட்சியாகவே இருப்பதால், சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி மே தினம் அதன்பிறகு சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையால்,ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும், கவியருவி நோக்கி அதிகளவில் சென்றனர். ஆனால், பயணிகளுக்கு தொடர்ந்து விதிக்கப்பட்ட தடையால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கவியருவியை காண விதிக்கப்பட்டுள்ள தடையால் ஆழியார் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழியாறு உள்ளிட்ட நீர் நிலைகளை தேடி செல்கின்றனர். கோடை விடுமுறை நாட்களில் வெளியூர்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கண்காணிப்பு தொடர்ந்திருக்கும் எனவும், கனமழை பெய்து அருவியில் நீர்வரத்து இருந்தால் மட்டுமே, மீண்டும் சுற்றுலா பயணிகள் கவியருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.