Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆபத்தை உணராமல் தடையை மீறி ஆழியாறு தடுப்பணையில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

*கண்காணிப்பு பலப்படுத்த கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு தொடர் தடையால் ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கவியருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, வெளிமாவட்டமின்றி, கேரள மாநில பகுதியிலிருந்தும் பயணிகள் அதிகமாக வருகின்றனர். இதில் ஆழியார் வருவோர், அருகே உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மழை இருக்கும் காலகட்டத்தில் அருவியில் தண்ணீர் அதிகளவில் வருவதால், அந்நேரத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

கடந்தாண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பல மாதமாக பெய்ததால் ஜனவரி மாதம் வரை கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. அதன்பின் வெயிலின் தாக்கம் அதிகரித்து மழையில்லாததால், பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து தண்ணீர் வரத்து மிகவும் குறைய துவங்கியதுடன், கவியருவியில் தண்ணீர் இன்றி பாறையாக காணப்பட்டது.

இதையடுத்து வறட்சியின் காரணமாக, கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், ஆழியாருக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகள் பலர் கவியருவிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தண்ணீரின்றி தொடர்ந்து தடையால், ஏமாற்றத்தில் திரும்புகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆற்றின் தடுப்பணை பகுதியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறங்கி குளித்து செல்கின்றனர். தடுப்பணை பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையிலும் அதனை மீறி சென்று குளிக்கின்றனர். தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்தாலும், அடிக்கடி உயிர் பலி வாங்கும் இந்த தடுப்பணையருகே போலீசார் கண்காணிப்பு பணியில் இல்லாதது தன்னார்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதால், வரும் நாட்களில் ஆழியாற்று தடுப்பணைகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகாரிக்க வாய்ப்புள்ளது. அந்நேரத்தில், அசம்பாவிதனம் ஏற்படுவதை தடுக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், பாதுகாப்பு கருதி குளிக்க அனுமதிப்பதை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.