Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கம்பம் அருகே திராட்சை தோட்டங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள திராட்சை தோட்டங்களைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தேனி மாவட்டம் முழுவதும் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, தென்னை மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி, சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது. இந்திய அளவில் திராட்சை உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் திராட்சை உற்பத்தியில் தேனி மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரையில், ஆண்டுக்கு ஒருமுறை தான் திராட்சை விளையும். ஆனால் தேனி மாவட்டத்தில் மூன்று சீசன் மகசூல் எடுக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் திராட்சை விளையக்கூடிய மண்வளம், மழைவளம், சீதோஷ்ண நிலையை தமிழகத்திலேயே தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு பகுதி கொண்டுள்ளது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் திராட்சை விளையும் பகுதி என்ற பெருமையை கம்பம் பள்ளதாக்கு பெற்றுள்ளதால் மத்திய அரசு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

மேலும் ஆண்டு முழுவதும் பழத்தை கொடுக்கும் ‘பூலோகத்து திராட்சை அட்சய பாத்திரமாக’ கம்பம் பள்ளத்தாக்கு திகழ்கிறது. இதனால் இங்குள்ள திராட்சை தோட்டங்களையும், இயற்கை காட்சிகளையும் ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அவர்கள் திராட்சை தோட்டங்களை பார்வையிட்டு உற்சாகமாய் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். அதன்படி தற்போது கோடை விடுமுறைக்கு தேனிமாவட்டத்திற்கு சுற்றுலா வரும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவி செல்லும் சாலையில் உள்ள திராட்சை தோட்டங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். சிலர் திராட்சை சாகுபடி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து திராட்சை கன்றுகள் மற்றும் பழங்களை வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து கடலூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு பகுதி மழைவளமும், மண் வளமும் நிறைந்திருக்கும் பகுதியாக உள்ளது. பெரியாறு ஆறு என இயற்கையொட்டி அமைந்த இப்பகுதி இயற்கை கொடுத்த பெருங்கொடை. இங்கும் விளையும் கருப்பு பன்னீர் திராட்சை சுவையாக உள்ளது. இந்த தோட்டத்திற்கு சென்று பார்வையிடும் போது மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாக தெரிவித்தனர்.