Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாரலாக பெய்யும் பருவமழை சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*2 நாட்களில் 8 ஆயிரம் பேர் வருகை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரலுடன் மழை பெய்வதால், இயற்கை சீதோஷ்ண நிலையை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆழியாரில் குவிந்தனர். கடந்த 2 நாட்களில் 8 ஆயிரம் பேர் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, பூங்கா ஆகியவற்றிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அளவுக்கு அதிகமாக இருக்கும். கடந்த சில வாரத்திற்கு மேலாக ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை தொடர்ந்து கொண்டிருந்ததுடன், சில நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், அந்நேரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்தது. கடந்த வாரம் இறுதிவரை பரவலான மழை பெய்துள்ளது.

இந்நிலையில், ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழையின்றி அவ்வப்போது சாரலுடன் மழை பெய்கிறது. கடந்த 2 நாட்களாக சில நேரம் சாரல் மழையால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால் ஆழியார் அணை மற்றும் பூங்காவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையில் தற்போது 112 அடிக்கு தண்ணீர் இருப்பதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல்போல் காட்சியளிக்கும் அணையின் அழகை கண்டு ரசித்து சென்றனர்.

மேலும் பயணிகள் பலரும் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அணைக்கு முன்புள்ள பூங்காவில் வெகுநேரம் பொழுதை கழித்தனர். ஆழியார் அணைக்கு இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாகவும், அதில் 75 சதவீதம் பேர் வெளியூர்களை சேர்ந்தவர்களாக இருந்தனர் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.