சுற்றுலாத்துறை கடுமையாக பாதித்துள்ள நிலையில் நேபாளத்தை கைவிட்டுவிட வேண்டாம்: உருக்கத்துடன் நடிகை மனிஷா வேண்டுகோள்
காத்மண்டு: நேபாள நாட்டின் சுற்றுலாத்துறையை கைவிட்டுவிட வேண்டாம் என்று நடிகை மனிஷா கொய்ராலா மற்றும் நடிகர் அலி பசல் உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேபாளத்தில் திபெத் எல்லைப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த துயர நிகழ்வால் அந்நாட்டின் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகை மனிஷா கொய்ராலா (54) சர்வதேச சமூகத்திற்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ‘நேபாள மக்கள் மீது உலக நாடுகள் எப்போதும் காட்டி வரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது நன்றிகள். திபெத் எல்லை பகுதியில் இயற்கை பேரிடர் ஏற்பட்டிருந்தாலும், சுற்றுலாத்துறை என்பது எங்கள் நாட்டின் உயிர் மூச்சாகும். நேபாளம் என்றால் எப்போதும் பேரிடரும், துன்பங்களும் நிறைந்த தேசம் என்ற எண்ணத்துடன் யாரும் புறக்கணித்து விடக்கூடாது. எங்களது அழகான வானிலை, பிரம்மாண்டமான இமயமலை, பாரம்பரிய கலாசாரம் மற்றும் சிறந்த மனிதர்களை கொண்ட இந்த தேசத்திற்கு சர்வதேச சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தர வேண்டும்’ என்று உருக்கமாக கூறினார். இதேபோல், பிரபல பாலிவுட் நடிகர் அலி பசல் (38) தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் நேபாள மக்களுடன் எப்போதும் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தென்கொரிய பாடகர் நிதியுதவி;
தென்கொரியாவின் பிரபல ‘ஸ்ட்ரே கிட்ஸ்’ இசைக்குழுவைச் சேர்ந்த முன்னணி பாடகரான லீ நோ (25), நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் அவசர தேவைகளுக்காக ‘வேர்ல்ட் விஷன்’ சர்வதேச தொண்டு நிறுவனம் வாயிலாக 100 மில்லியன் கொரிய வான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.61 லட்சம்) நிதியை வழங்கியுள்ளார். இதுகுறித்து பாடகர் லீ நோ கூறுகையில், ‘துயரமான சூழலில் தவித்து வரும் மக்களுக்கு எனது இந்த உதவி சிறிய அளவில் பலமாக அமையும் என நம்புகிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களும் விரைவில் தங்களது இயல்பான அமைதியான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று முழு மனதுடன் வேண்டுகிறேன்’ என்று உருக்கமாக தெரிவித்தார்.



