Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

2 நாள் சுற்றுப்பயணமாக வரும் 8, 9ம் தேதி தமிழகம், புதுச்சேரிக்கு அமித்ஷா வருகை

புதுச்சேரி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக வரும் 8 மற்றும் 9ம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழகத்துக்கு வருகிறார். 8ம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமான மூலம் புறப்படும் அமித்ஷா, மாலை 3.55 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து மாலை 4 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்துக்கு வருகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே உள்ள ஓட்டல் அகார்டில் இரவு தங்குகிறார். 9ம் தேதி காலை 8 மணிக்கு கோரிமேடு காவல் மைதானத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு இந்த புதுச்சேரி காவல்துறைக்கு விருது வழங்குகிறார். விழாவை முடித்துக்கொண்டு காலை 10.45 மணிக்கு சாலை மார்க்கமாக புதுச்சேரி விமான நிலையத்துக்கு செல்கிறார்.

அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 10.50மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் மைதானத்துக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் சென்று ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், விழாவை முடித்து கொண்டு பிற்பகல் 12.50 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கிருந்து பிற்பகல் 1.55 மணிக்கு இந்திய விமானப்படை விமான மூலம் டெல்லி செல்கிறார்.

* புதுச்சேரியில் 85 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சியமைத்து கடந்த மே மாதம் 13ம் தேதி 5வது முறை முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அவருடன் பாஜவை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். இதனை தொடர்ந்து, ஜூன் 17ம் தேதி என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து, ராஜவேலு, பாஜவை சேர்ந்த ஜிஎன்எஸ்.ராஜசேகரன் ஆகிய 3 பேரும் பதவியேற்றனர்.

சபாநாயகர் பதவி, முக்கிய இலாகாவை பாஜ கேட்டதால், இலாகாவை ஒதுக்கி தராமல் முதல்வர் ரங்கசாமி இழுத்தடித்து வந்தார். நாளை மறுநாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வர உள்ள நிலையில், அமைச்சர்களுக்கு நேற்று இரவு இலாகா ஒதுக்கப்பட்டது.

முதல்வர் ரங்கசாமிக்கு போக்குவரத்து, பொது நிர்வாகம், வருவாய் மற்றும் கலால், கூட்டுறவுத்துறை, அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மீண்டும் உள்துறை, மின்சாரம், கல்வித்துறை, மல்லாடி கிருஷ்ணராவுக்கு பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, ராஜவேலுக்கு ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதித்துறை, சிவக்கொழுந்துவுக்கு குடிமைப்பொருள் வழங்கல், சிறுபான்மையினர் நலத்துறை, ஜிஎன்எஸ்.ராஜசேகரனுக்கு வேளாண், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.