உலக நாடுகளுக்கே பஞ்சாயத்து செய்பவர்கள் நாங்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முறையான திட்டமிடல் இல்லாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி தனது தற்குறித்தனமான நடவடிக்கையால் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார். ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் போதே நமக்கும் எதிர்காலத்தில் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுதாரித்துக்கொண்ட ஈரான் தனது படை தளத்தை இரும்புக்கோட்டையாக வலுப்படுத்தி வைத்திருந்தது. பல மாகாணங்களாக பிரித்து ஒவ்வொரு மாகாணத்துக்கும் ராணுவப்படையை 3 அடுக்குகளாக அமைத்து தலா 3 தளபதிகளை நியமித்தது.
மேலும் போர் மூண்டுவிட்டால் இவர்கள் இலக்கை நோக்கி சுதந்திரமாக தாக்குதல் நடத்தவும் அனுமதி அளித்துவைத்துள்ளது. அமெரிக்கா தாக்குதலை தொடங்கியவுடன் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அதே சமயம் இஸ்ரேலின் தாக்குதலையும் சமாளித்து அவர்களுக்கும் பதிலடி கொடுத்தது. இதனால் டிரம்ப் கொஞ்சம் கலக்கமடைந்தார். அணுஆயுதம் தயாரிக்க யூரேனிய செறிவூட்டுதலை நிறுத்திவிட்டால் போரை நிறுத்திவிடுகிறேன். ஈரானில் எந்த தலைவர்களும் இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது.
விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் அறிவிப்பை வெளியிடுகிறார். இதற்கிடையே ேபார் ஒரு மாதமாக நீடித்து வருவதால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலை வாசி அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன. அமெரிக்க மக்களே டிரம்ப்புக்கு எதிராக கோஷமிட தொடங்கிவிட்டனர். போரை தொடர பல கோடிகள் தேவைப்படுகிறது என்று பென்டகன் அறிவித்துள்ளது. ஈரான் தாக்குதலால் பல உயரமான கட்டிடங்கள், விமானநிலையங்களை இழந்த அரபு நாடுகள் அவற்றை சீரமைக்க அமெரிக்கா நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துவருகின்றன.
இதனால் அமெரிக்க அதிபர் செய்வதறியாது கைபிசைந்து நிற்கிறார். தேவையில்லாமல் ஈரானை தொட்டுக்கெட்டேன் என்று மனதுக்குள் புலம்புகிறார். 15 அம்ச ஒப்பந்தத்துக்கு உடன்படாவிட்டால் ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இந்த மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து்ள்ளது. அரபு நாடுகளில் உள்ள கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய பெரிய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் பதிலுக்கு எச்சரித்துள்ளது. ஆனால் எவ்வளவு அடிவாங்கினாலும் வலிக்காத மாதிரியே காட்டிக்கொள்ளும் டிரம்ப், 2 வாரங்களில் ஈரானை கற்காலத்துக்கு அனுப்பிவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். அவர் ஏப்.1ம் தேதி மக்களிடம் உரையாற்றியது ‘முட்டாள்கள் தின ஜோக்’ என்று கிண்டலடித்துள்ளது.
அமெரிக்க அதிபரின் தான்ேதான்றித்தனத்தால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளையுமே அவர் கற்காலத்துக்கு அனுப்பிவிடுவார் போலிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மீட்டு எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீராக்குவேன் என்று கூறிய டிரம்ப், அதிலிருந்தும் பின்வாங்கிவிட்டார். டிரம்ப், தனது ஈகோவை விட்டு உலக நாடுகளி்ன் நலனை சிந்திக்க வேண்டும். அடிப்படையில் ஈரான் மிக பலமான போர் எதிர்ப்பு மதில்சுவரை கட்டிஎழுப்பியுள்ளதால் அமெரிக்கா தற்போது பதுங்குகிறது. ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள டிரம்ப்புக்கு மனமில்லை என்பது தான் உண்மை.


