பொதுவாக தாங்கள் எதிர்பார்ப்பதை அதிகம் வெளிப்படுத்தாமல் அல்லது வெளிப்படுத்தத் தெரியாமல் தவிப்பவர்கள் ஆண்கள்தான். அதனால்தான் “இதயம்” படம் முதல் “இதயம் முரளி” படம் வரை இன்னமும் அவர்களால் ஒரு பெண் மீதான விருப்பத்தை கூட வெளிப்படுத்த தெரியவில்லை.
பெண்களின் நிலை வேறு அவர்கள் ஆரம்ப காலம் முதலே பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் அவர்களுக்கு ஆசைகள் இருந்தால் கூட அதை வெளிப்படுத்த உரிமை கிடையாது போன்ற பல்வேறு தடைகளுக்கு இடையில் வாழப்பழகியவர்கள். ஆனால் ஆண்களுக்கு இப்படிப்பட்ட எந்த தடைகளும் அல்லது உரிமைகள் மறுப்பும் கிடையாது. ஆனாலும் அவர்களுக்குள்ளும் சில எதிர்பார்ப்புகள் வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வுகள். அப்படி ஆண்கள் தாங்கள் அதிகம் விரும்பி ஆனால் வெளிப்படையாகக் கேட்கத் தயங்கும் ஐந்து முக்கியமான விஷயங்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. கடினமான காலங்களிலும் மரியாதை
*ஆண்கள் வெற்றிபெறும் போது மட்டும் மரியாதை எதிர்பார்ப்பதில்லை.
*அழுத்தமான, கடினமான அல்லது குறைபாடுகள் நிறைந்த , சறுக்கலான காலங்களிலும் துணை தன்னிடம் கண்ணியமாகப் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
*தன் மீது அன்பு செலுத்தும் பெண்ணின் பார்வையில் தான் சிறியவனாக, அல்லது வேலைக்கு ஆகாதவனாக உணரப்படுவதுதான் பல ஆண்களை உள்ளுக்குள் அமைதியாக உடைக்கும்.
2. வெளிப்படையான பாராட்டு
*பல ஆண்கள் தங்கள் அழுத்தங்களை அமைதியாகச் சுமந்து, வேலை செய்து, பிரச்னைகளைத் தீர்த்து, குடும்பத்தை ஆதரிக்கிறார்கள்.
*அவர்கள் எந்தப் புகாரும் இல்லாமல் இவற்றைச் செய்தாலும், “நீ செய்வதை நான் பார்க்கிறேன்”, “நீ எனக்குப் பெருமை சேர்க்கிறாய்”, “இதைச் செய்வதற்கு நன்றி” போன்ற வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறார்கள்.
*அவர்கள் பாராட்டு தேவையில்லாதவர்கள் போல் நடித்தாலும், உள்ளுக்குள் அதை எதிர்பார்க்கிறார்கள்.
3. தேவைப்படுவது மட்டுமல்லாமல், விரும்பப்படுவதும் அவசியம்
*ஸ்திரத்தன்மை, உதவி, பாதுகாப்பு அல்லது ஆதரவுக்காகத் துணை தன்னை நம்பியிருப்பதை ஆண்கள் அறிவார்கள்.ஆனால் அவர்கள் உண்மையில் விரும்புவது தன் இருப்புக்காகவும், தொடுதலுக்காகவும் அவர்களை விரும்புகிறோம் என்பதற்காக இருக்க வேண்டும் என்பதே.
*அவர்கள் தமக்காகச் செய்யும் உதவிகளுக்காக மட்டுமல்லாமல், ஒரு ஆணாக அவர்கள் யார் என்பதற்காகவும் அவர்கள் விரும்பப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
4. வீட்டிற்கு வரும்போது கிடைக்கும் அமைதி
*போலி முகமோ அல்லது பிரச்னைகளை மறைக்கும் மௌனமோ இல்லாமல், உண்மையான அமைதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
*மென்மையான குரல், அன்பான வரவேற்பு மற்றும் வீடு என்பது தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய இடமல்லாமல் நிம்மதியாக மூச்சுவிடும் இடமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
*பல ஆண்கள் இதை நேரடியாகச் சொன்னால் அதிகப்படியான கோரிக்கைகள் வைப்பதாகத் தோன்றும் என்று அஞ்சி இதை வெளியே சொல்வதில்லை.
5. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மென்மையான பாசம்
*எதிர்பாரா ஆறுதல், முதுகை தட்டிக் கொடுத்தல், தலைமுடி கோதுவது போன்ற எளிய அன்பான செயல்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை மனைவியிடம் மட்டுமல்ல அம்மாவிடமும் , சகோதரியிடம் கூட எதிர்பார்ப்பார்கள் ஆண்கள்.
*ஆண்கள் எப்போதும் மென்மையை வெளிப்படையாகக் கேட்பதில்லை, ஆனால் அதை ஆழமாக உணர்கிறார்கள்.
*சில சமயங்களில் அவர்கள் விரும்புவது, அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் சின்னச் சின்ன செயல்கள் தான்.
இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாலேயே பல வீடுகளில் ஆண்கள் கோபப்படுவதும் எரிச்சலடைவதும் நிகழ்கிறது. வீட்டிற்கு வந்ததே சரி என்று உன் அம்மா இப்படி , உன் மனைவி இப்படி, உன் அக்கா அல்லது தங்கை இப்படி செய்தார், உன் அப்பா சொல்வதைக் கேட்கவில்லை, குழந்தை அடம்பிடிக்கிறான் என முழுமையாக குறைகளை மட்டுமே அடுக்கினால் நிச்சயம் ஆணின் நிம்மதி குழையும்.
வந்தவுடன் ஒரு டீ, அலுவலக நிலை விசாரிப்புகள் எல்லாம் முடிந்து ஒரு ஓய்வு கொடுத்து பின்னர் இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது அதற்கு இப்படி ஒரு தீர்வு இருக்கிறது செய்யலாமா என கேட்கும் போது ஆணின் மனம் அமைதியாக ஆலோசிக்கும். இதனைக் கையாண்டால் பல குடும்பங்கள் அமைதியாக , சந்தோஷமாக இருக்கும். பெண்ணியம் மற்றும் பெண் சுதந்திரம் இதெல்லாம் தேவைதான். மேலே சொன்ன சம்பவங்களை செய்தால் ஒருவேளை பெண்ணடிமைத் தனம் என நினைப்பது மிக தவறு. கணவன் - மனைவி அல்லது அம்மா - மகன், அல்லது சகோதரன் - சகோதரி உள்ளிட்ட உறவுகளில் தேவையற்ற பெண் சுதந்திரம் அல்லது ஆணாதிக்கம் போன்ற விவாதங்கள் தேவையே இல்லை. ஒருவருக்கொருவர் அவரவர் தேவைகளை , அவர்களின் இடத்தை புரிந்து நடந்தாலே குடும்பத்திற்கு ஆரோக்கியமாக அமையும்.
- எஸ். விஜயலட்சுமி


