சென்னை: அரசு பேருந்தின் டிஜிட்டல் பெயர்ப் பலகையில் "தக்காளி வெற்றி கழகம்" என்ற வாசகம் இடம்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) விளக்கம் அளித்துள்ளது.
"தக்காளி வெற்றி கழகம்" என்ற வாசகம் இடம்பெற்ற வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? இதுகுறித்து எம்டிசி என்ன விளக்கம் அளித்துள்ளது?
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில், சமீப காலமாக டிஜிட்டல் பெயர்ப் பலகைகளில் வழித்தடப் பெயர்கள் மர்ம நபர்களால் மாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு பணிமனையிலிருந்து இயக்கப்படும் 119-வது வழித்தடப் பேருந்தின் டிஜிட்டல் பெயர்ப் பலகையில் "தக்காளி வெற்றி கழகம்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள எம்டிசி, சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் டிஜிட்டல் வழித்தடப் பலகையை மாற்றியதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பணிமனை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, டிஜிட்டல் பெயர்ப் பலகை உடனடியாகச் சரிசெய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.
சமீப காலமாக சென்னை மாநகரப் பேருந்துகள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பல்வேறு மாவட்டப் பேருந்துகளின் டிஜிட்டல் பெயர்ப் பலகைகளும் மர்ம நபர்களால் மாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்தச் சூழலில், "தக்காளி வெற்றி கழகம்" என்ற வாசகத்துடன் வெளியான இந்த வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து தற்போது எம்டிசி விளக்கம் அளித்துள்ளது.
குறிப்பாக, இந்தப் பேருந்து சென்னை அடையாறு பணிமனையிலிருந்து செம்மஞ்சேரி வழியாக இயக்கப்படும் 119-வது வழித்தடப் பேருந்து என்றும், அந்தப் பேருந்தில்தான் டிஜிட்டல் பெயர்ப் பலகை மாற்றப்பட்டிருந்ததாகவும் எம்டிசி தெரிவித்துள்ளது.


