Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இன்றைய குழந்தைகள்தான் எதிர்கால இந்தியாவின் தூண்கள்!

பொதுவாக எல்லா குழந்தைகளின் சேட்டைகளும், குறும்புகளும் எல்லோராலும் ரசிக்கப்பட மாட்டாது. ஒரு சில குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவ்வாக தன் வீட்டுப் பொருட்கள் மட்டுமல்லாமல், பிறர் வீட்டுப் பொருட்டு களையும் கூட சேதம் செய்யும் அளவுக்கு அவர்கள் குறும்பு எல்லை மீறும். இதனால் அவர்கள் மீது தேவையில்லாத வெறுப்பு ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்கலாம். உங்கள் குழந்தைகள் நல்ல குழந்தை களாக டாப்பராககூட மாறுவதற்கு இந்த ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும்.

நமது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடவும். அவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கவும் கோடை காலம் மிகவும் சிறந்தது. ஏனென்றால், பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு விஷயங்களை கற்பிக்கலாம். இருப்பினும் கோடை விடுமுறையில் நமது குழந்தைகள் கொளுத்தும் வெயிலில் விளையாட தயாராக இருப்பார்கள். வீட்டுக்குள்ளேயே அருமையான தருணங்களை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை எப்படி பயனுள்ளதாக மாற்றலாம். கோடை மட்டுமின்றி, விடுமுறை என்றாலே டிவி, விளையாட்டு என்றில்லாமல் சில நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள்.

நர்சரி கார்டன்களைப் பார்க்க அழைத்துச் செல்லலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு தோட்டக்கலை மீதான ஆர்வத்தை வளர்க்க விரும்பினால் அவர்களை அருகில் உள்ள நர்சரிக்கு அழைத்துச் சென்று பல்வேறு வகையான செடிகள் மற்றும் பூக்களைப் பற்றி கூறலாம். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைக்க சில பூச் செடிகளையும் வாங்கிச் செல்லலாம். மேலும் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல உங்கள் நகரத்தில் ஏதேனும் மலர்க் கண்காட்சி நடைபெறுகிறதா என்று அறிந்து, அவர்களை அழைத்துச்செல்லுங்கள்.

வாசிப்பு திறனை மேம்படுத்தலாம்

எதாவது ஒரு சூப்பர் ஹீரோ, அல்லது கார்டூன்கள், காமிக்ஸ் மீது அதிக விருப்பம் காட்டினால் அது சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் புத்தகம் வாசிப்பில் நாட்டம் அதிகரிக்கும். புத்தகம் வாசிப்பு மன அழுத்தத்தை குறைத்து, ஒருநிலைப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் அவர்களின் வாசிப்புத் திறனை மேம்

படுத்தலாம். ஆனால் பாடப்புத்தகங்களை வாசிக்க கூற வேண்டாம். ஏனென்றால் என்னடா லீவுல கூட நாம் படிக்கணுமா என நினைத்துவிடுவார்கள். ஆதலால் கதைப் புத்தகங்கள், விடுகதை போன்ற புத்தகங்களை வாசிக்க கொடுக்கலாம். இல்லையெனில் உங்கள் குழந்தை படிக்க விரும்பும் புத்தகங்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

செல்லப்பிராணி வளர்ப்பு

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செயல்பாடுகளில் ஒன்று செல்லப்பிராணி வளர்ப்பு. இது உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியளிக்கும் பொழுதுபோக்காக இருக்கும். இதனால் உங்கள் குழந்தையை மிகவும் பொறுப்புள்ளவராகவும், பொறுமையாகவும், இரக்க முள்ளவராகவும், தன்னம்பிக்கை கொண்டவராகவும் மாற்றும். செல்லப்பிராணிக்கு நகங்களை வெட்டுதல், உணவளித்தல், வாக்கிங் அழைத்துச் செல்வது போன்ற விஷயங்களை உங்கள் குழந்தைகளை செய்யச் சொல்லுங்கள். ஒருவேளை உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்க அனுமதி இல்லை என்றால் அருகாமையில் இருக்கும் ப்ளூ க்ராஸ் மையங்களுக்கு அடிக்கடி கூட்டிச் செல்லுங்கள். அங்கே நிகழும் விலங்குகள் நல முகாம்களில் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.

கழிவுகளை மறுசுழற்சி செய்ய கற்றுக்கொடுப்பது

தேவையற்ற கழிவுகளை மறுசுழற்சி செய்வது சுற்றுச்சூழல் நட்பு நடைமுறையாக கருதப்படுகிறது. காகிதம், அட்டை, பிளாஸ்டிக், ஸ்டீல் கேன்கள் போன்ற கழிவுப்பொருட்களை புதியதாக மாற்ற உதவுகிறது. நீண்ட நாள் ஆன தகர டப்பாக்களை பெயிண்ட் செய்து அதில் செடி வைக்க கற்றுக் கொடுக்கலாம். வீட்டிலேயே மறுசுழற்சி செய்வதன் மூலம் உங்கள் பிள்ளையை ஒரு பொழுதுபோக்காக மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கலாம்.

பாட்டு பாடுதல்

பாடுவது ஒரு ஆர்வம் மற்றும் திறன் சார்ந்த பொழுது போக்கு. இது மனதை தளர்த்த உதவுகிறது மற்றும் மேம்பட்ட சுவாசம் மற்றும் இதய செயல்பாடு போன்ற பல உடலியல் நன்மைகளை வழங்குகிறது. இசை வகுப்பில் சேர்வது உங்கள் குழந்தையின் திறமையை அதிகரிக்க உதவுவதோடு, அவர்களின் மனதையும் அமைதியாக்கும் திறனை மேம்படுத்தவும் உதவும்.

நடனம் கற்கலாம்

நடனம் மிகவும் சுவாரஸ்யமான உடற்பயிற்சிகளில் ஒன்று. இது மனதை நிதானப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. உங்கள் குழந்தை நடனமாட ஆர்வமாக இருந்தால் அவர்களை ஒரு நடன வகுப்பில் சேர்ப்பது நல்லது. ஒரு தொழில் முறை உதவியாளரிடமிருந்து நடனத்தைக் கற்றுக் கொள்வது, நடனத் திறன்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு உதவும். இல்லையேல் இன்று ஆன்லைனில் ஏராளமான வகுப்புகள் உள்ளன அதில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

சமைக்க கற்பித்தல்

சமையல் கலை ஆண் - பெண் என பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். சமையலறையில்தான் ஆண் -பெண் சமம் என்னும் வகுப்பை போதிக்க முடியும். குறைந்தபட்சம் உன் தேவைக்கு நீ சமைக்கக் கற்றுக்கொள் என்னும் பாடத்தையாவது கற்றுக்கொள்ளுங்க. வயதுக்கேற்ப வேலைகளை நிர்ணயிக்கலாம். குறைந்தபட்சம் சமையலுக்கு உதவக் கற்றுக்கொடுக்கலாம். அவர்களை எக்காரணம் கொண்டும் திட்டாதீர்கள். பொறுமை முக்கியம்.

தைப்பது அல்லது பின்னல்

கை அல்லது இயந்திரம் மூலம் நூல் அல்லது துணி வைத்து கைவினை பொருட்களை தயாரிக்க கற்றுக் கொடுக்கலாம். இதனால் கைவினைப்பொருளின் மீதான இவர்களின் ஆர்வம் அதிகரிக்கும். பின்னல் வகுப்புகள், உல்லன் கைவினைகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். பொறுமையை அதிகரிக்கும்.

நாணயங்களை சேகரித்தல்

குழந்தைகள் பலரின் ஆர்வமாக காயின் சேகரிப்பு இருந்து வருகிறது. இது குழந்தைகளுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், கல்வி சம்மந்தமான பொழுதுபோக்காகவும் இருக்கும். நாணயங்களை சேகரிப்பது, அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், உங்கள் பிள்ளைகளை பழக்கப்படுத்துங்கள். பணம் மீதான ஆசை குறைந்து, அதன் மீதான மதிப்பு கூடும். பணத்தின் மீதான ஆசையை விட அதன் மீதான மதிப்புதான் நேர்மையான உழைப்பு மூலம் வரும் பணம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.

புகைப்படம் எடுத்தல்

போட்டோகிராஃபி தற்போது அனைவருக்கும் பிடித்த பொழுதுபோக்காக இருக்கும். ஏனென்றால், தொலைபேசி வைத்திருக்கும் அனைவரும் புகைப்படக்கலைஞர்களாக மாறிவிட்டார்கள். அவர்களுக்குத் தேவையானது கேமரா, வழிகாட்டுதல் மற்றும் நல்ல படங்களை எடுப்பதற்கான உதவிக் குறிப்புகளை வழங்குங்கள். பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். படங்களைக் கிளிக் செய்யக் கற்றுக்கொடுங்கள். டிஜிட்டல் உலகில் அடிமையாக இருக்க வேண்டாம், ஆனால் எதிர்கால டிஜிட்டல் உலகிற்கு ஈடுகொடுக்க அதன் அறிவை ஒரு பாடமாகக் கற்றுக்கொள்ளலாம்.

- பொ. பாலாஜிகணேஷ்.