Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வெற்றிப் பயணத் திட்டத்தால் செலவு அதிகரிப்பு: நெருக்கடியில் தவிக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்

*பணியாளர்கள் சங்கத்தினர் வேதனை

மதுரை: வெற்றிப் பயணத் திட்டத்தால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிச்சுமை அதிகரித்து, அவை அதலபாதாளத்தில் வீழும் நிலை உருவாகியுள்ளதாகப் போக்குவரத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தின்கீழ், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மாதந்தோறும் மானியத் தொகை முறையாக வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்துக் கழகங்களின் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப மானியத் தொகை முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், நடத்துநர்களுக்கான பயணப்படி கூட சரிவரக் கிடைப்பதில்லை என்றும் பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்துக் கழக சங்கத்தினர் கூறுகையில், ‘‘இலவச பயணம் தானே என பல பெண்கள் அலட்சியமாக உள்ளனர். பஸ்சில் ஏறும் பலர் செல்போனில் ஒன்றி உருகி பயண சீட்டு கூட எடுக்காமல் நடத்துனர் கூப்பிட்டாலும் அசைவின்றி மூழ்கி விடுகின்றனர். ஆனால், ஒரு நிறுத்தத்தில் இருந்து அடுத்த நிறுத்தத்திற்குள் பயண சீட்டு விபரத்தை இணையத்தில் இயந்திரம் வழியாக ஏற்ற வேண்டும் என்பதால் நடத்துனர் பயணிகளிடம் கரார் காட்ட வேண்டியதுள்ளது. ஆனால் பயணிகள் அது தெரியாமல் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுகின்றனர்.

பயண விபரத்தில், ஒரு பஸ்சில் முதல் நாள் மதியம் முதல் கடைசி நடை வரை ரூ.11 ஆயிரம் பெண்களுக்கும், ரூ.7,500 ஆண்களுக்குமாக பயணச்சீட்டு கொடுக்கப்படுகிறது. இதில் பெண் பயணச் சீட்டுக்கு பண வரவு கிடையாது. ஆனால், ஒரு நாளைக்கு வண்டிக்கு ரூ. 10 ஆயிரம் வரை டீசல் செலவு உள்ளது. இதே போல் ஒரு கிளையில் 100 வண்டிகள் ஓடுகிறது. இதில், ஒரு நாளைக்கு வெற்றி பயணத்தில் ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு ஆகிறது. இது போக வண்டி தேய்மானம், பணியாளர்கள் ஊதியம், பணிமனை செலவு என பெரும் செலவு ஆகிறது.

ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து நிறுவனங்கள் அதல பாதாளத்தில் வீழும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வரும் நாட்களில் டீசலுக்கான பணம், டயர், பிரேக்சூ கிளச் பிளேட் என செலவுகளை சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்த மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் வருமா என்ற சந்தேகத்தை எழுந்துள்ளது. கடைசியாக பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு வந்த நிலை தான் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கும் வரபோகிறது. இந்த பஸ்கள் எல்லாம் ஒரு காலத்தில் டிவிஎஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு, பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் நாட்டுடமையாக்கப்பட்டு மக்களின் சேவை அமைப்பாக இயங்கியது. ஆனால், தற்போது, நடத்துனர்கள் நாள்தோறும் பயண படியாக கனிசமான தொகை கிடைப்பது கூட கேள்விக் குறியாக மாறி வருகிறது.

மாதம்தோறும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானிய தொகையை விடுவித்தால் மட்டுமே நஷ்டத்தை ஈடு செய்து பஸ்களை இயக்க முடியும். தற்போது பல பஸ்கள் இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதில் தற்போது, தவெக கட்சி கொடி கலரில் மாவட்டத்திற்கு பல பஸ்கள் கொடுத்துள்ளனர். அந்த பஸ்கள் ஒரே மாதத்தில் ரோடுகளில் பழுதாகி நின்று விடுகிறது. பொதுமக்களை வைத்து தள்ளிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது என்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “பெண்களுக்கு கடந்த ஆட்சியிலேயே இலவசப் பேருந்துப் பயணம் என்பது கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது அதனை விரிவாக்கம் செய்வதாக அதன், நிதிச்சுமையை போக்குவரத்து கழகத்தின் மீது சுமத்தியிருப்பது ஏற்புடையதல்ல. அதே நேரத்தில், அந்தத் திட்டத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்காமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு, போதிய எண்ணிக்கையில் இயக்கப்பட வேண்டும்.

பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நிற்பதும், ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதும் பொதுமக்களைத்தான் நேரடியாகப் பாதிக்கும். எனவே, இலவசப் பயணத் திட்டத்துக்கான மானியத்தை உரிய காலத்தில் வழங்கி, பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” தெரிவித்துள்ளனர்.