நாமக்கல்: ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). இவர் தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) தனக்கு நல்ல தொடர்பிருப்பதால், உறுப்பினர் பதவி வாங்கி தரமுடியும் என நெருக்கமானவர்களிடம் கூறி வந்துள்ளார். இதை அறிந்த, நாமக்கல்லை அடுத்த புதன்சந்தையை சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியர் மாணிக்கவாசகன், தனது மனைவிக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி வாங்கி தரும்படி சுரேஷ்குமாரை அணுகியுள்ளார். இதற்கு சுரேஷ்குமார் கேட்ட ரூ.2 கோடியை மாணிக்கவாசகன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்று கொண்ட சுரேஷ்குமார், உறுப்பினர் பதவி பெற்றுத் தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணிக்கவாசகன், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈரோட்டில் நேற்று சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த ஒருவர் மூலம் டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி, சுரேஷ்குமார் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. சுரேஷ்குமார் அளித்த தகவலின் படி, இந்த மோசடியில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.



