Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிப்பவர்களைத் தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும்: திருமாவளவன்!

தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் நிலவுவதாலும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாலும் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மனித வளம், தொழில் வளம் என அனைத்துத் தளங்களிலும் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கு இங்கு நிலவும் சமூக நல்லிணக்கமே காரணமாகும். தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை விரும்பாத சனாதன சக்திகள் இங்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். இந்துக்களும், முஸ்லிம்களும் சமய நம்பிக்கையோடு மட்டுமின்றி சகோதரத்துவத்தோடும், தமிழர் என்ற உணர்வோடும் பல நூறு ஆண்டுகளாகத் திருப்பரங்குன்றத்தில் தத்தமது வழிபாட்டுத் தலங்களில் அமைதியாக வழிபட்டு வருகின்றனர். எப்படியாவது தமிழ்நாட்டிலும் மதக் கலவரத்தை மூட்டி தமிழர்களின் ஒற்றுமையைக் கெடுக்க எண்ணும் சனாதனக் கும்பல் இப்போது திருப்பரங்குன்றத்தில் இரத்தக் களறியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இத்தகையப் பிரிவினைவாத முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தமிழ்நாட்டின் சமய நல்லிணக்கச் சூழலைக் கெடுக்க முயற்சிக்கும் நாசகார சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக சமணம், சைவம், வைணவம் என அனைத்து வழிபாடுகளும் நடந்துள்ளன. அங்குள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானது. அந்தக் கோயில் அமைந்துள்ள மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோயிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளன. தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செய்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு அப்படி நேர்த்திக் கடன் செய்யச் சென்ற முஸ்லிம் ஒருவரைக் காவல்துறையினர் தடுத்துள்ளனர். அதன்பின் வருவாய் வட்டாட்சியர் தர்காவில் ஆடு, கோழி பலியிடக்கூடாது எனத் தடை விதித்துள்ளார். அதுதான் இந்தப் பிரச்சனைக்கான மூலக் காரணம் எனத் தெரிகிறது. காவல் துறையினரும், வருவாய் வட்டாட்சியரும் தம் விருப்பத்தின்பேரில் செயல்பட்டனரா? அல்லது அவர்களுக்கு அப்படி வழிகாட்டுதல் ஏதும் தன்னால் வழங்கப்பட்டதா? என்பதை மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்த வேண்டும்.

சிக்கந்தர் தர்கா முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்பதை நீதிமன்றம் 100 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1923 ஆம் ஆண்டு மதுரை "அடிஷனல் சப் கோர்ட்" பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்து அந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாண அரசு இங்கிலாந்தில் இருந்த அன்றைய உச்சநீதிமன்றமாகக் கருதப்பட்ட பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்தது. அதன் மீது 1931 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே அது உறுதி செய்தது. சுதந்திரம் அடைந்த பிறகு 1975 இல் மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் மீண்டும் அதே தீர்ப்புதான் கூறப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் வாழும் மக்கள் எவரும் இப்பிரச்சனையை எழுப்பவில்லை. அவர்கள் இணக்கத்தோடு வாழவே விரும்புகின்றனர். வெளியூரிலிருந்து அங்கு செல்லும் சமூக விரோத சனாதனக் கும்பல்தான் கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறது.

இந்தப் பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் சரியாகக் கையாளவில்லை என்றும்; அவர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் குற்றச் சாட்டு குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விசாரித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் சனாதன சக்திகளைச் சரியாகக் கையாளாமல் விட்டால் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் இப்படி கவரங்களை ஏற்படுத்துவார்கள். இதைத் தமிழ்நாடு அரசு உணரவேண்டும். திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மத அடிப்படைவாதிகள் தமிழ்நாட்டு மக்களுக்குச் சவால் விடுத்துள்ளனர். அதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, மதச்சார்பற்ற சக்திகள் அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டைக் காக்கும் கடமையை நிறைவேற்ற அனைத்து சனநாயக சக்திகளும் முன்வரவேண்டும்.