Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மலையேற்ற திட்டத்தை கைவிட கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற பயண திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற பயணத்தை அனுமதித்தால் வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

தமிழகத்தில் 38 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் மலையேற்றத்தை அனுமதிக்கும் போது, அதிக எண்ணிக்கையில் மனித நடமாட்டம் ஏற்படும். அதன் காரணமாக விலங்குகள் உணவு தேடும் நடவடிக்கை, இனப்பெருக்க நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.

மனிதர்கள் மூலம் வன விலங்குகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மலையேற்றத்திற்கு செல்பவர்கள் எடுத்துச் செல்லும் உணவுகளின் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வனப்பகுதியில் விட்டு திரும்பக்கூடும் என்பதால் வனம் மாசடைய வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவும் விலங்குகள் காயம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே, வனப்பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலையேற்ற பயணத் திட்டத்தை கைவிடும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.