Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டம் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

*75 ஆயிரம் ஏக்கரில் விதைப்பு பணி தொடக்கம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் 75 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியானது நடைபெற்றுள்ளது.

தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என ஆண்டுஒன்றுக்கு மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டில் அரசு சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருள்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன.இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர்.

இதனையொட்டி நடப்பு காரீப் (2024/25) பருவத்திற்காக கடந்தாண்டு செப்டம்பர் 1ந் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 173 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 93 ஆயிரத்து 986 மெ.டன் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்குரிய தொகை ரூ.210 கோடியானது 21 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

அதன்பின்னர் சம்பா சாகுபடியானது நடைபெற்று பின்னர் அறுவடை பணிகள் நடைபெற்ற நிலையில் நெல் கொள்முதலுக்காக மாவட்டம் முழுவதும் 538 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் நடைபெற்றது.

அதன்படி மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்காக ஓரு லட்சத்து 31 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ ஆயிரத்து 270 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில் நெல் தரிசில் உளுந்து 22 ஆயிரத்து 143 ஏக்கரிலும் மற்றும் பச்சைபயறு 72 ஆயிரத்து 67 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் கோடை நெல் சாகுபடியானது கடந்த மார்ச் மாதம் துவங்கி 30 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றுள்ளது.

மேலும் நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையானது கடந்த 12ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில் 16ந் தேதி கல்லணையும் திறக்கப்பட்டதையடுத்து அனைத்து ஆறுகளிலும் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் போர்வெல்கள் வசதியுள்ள இடங்களில் சாகுபடியினை விவசாயிகள் தற்போது துவங்கியுள்ளனர்.

இதனையொட்டி நடவு பணி, விதை விதைக்கும் பணி போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் 75 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணியானது நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.