திருவண்ணாமலையில் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ பக்தி முழக்கம் விண்ணதிர 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்: 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு தரிசனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், ஆறு ஆதாரத் தலங்களில் மணிப்பூரக தலமாகவும் அமைந்திருக்கிறது. நினைக்க முக்தித்தரும் திருத்தலமாக திகழும் இத்திருக்கோயில், தென்னகத்து கயிலாயம் என போற்றப்படுகிறது. ஞான தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலை, சித்தர்களின் சரணாலயம் எனும் சிறப்பை பெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையும், பெருமையும் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்திபெற்றது.
அதன்படி, இந்த ஆண்டு தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் 6ம் நாளான்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளான்று மகா தேரோட்டமும் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக நேற்று மகாதீப பெருவிழா கோலாகலாமாக நடந்தது.
அதன்படி, நேற்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, தீபத்திருவிழா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மகா தீபப்பெருவிழா நேற்று மாலை நடந்தது. அதையொட்டி, பகல் 2 மணியளவில் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணி முதல், பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் கோயில் 3ம் பிரகாரம் தீபதரிசன மண்டபத்தில் அடுத்தடுத்து எழுந்தருளினர்.
பின்னர், உமையாளுக்கு இடபாகம் வழங்கிய அண்ணாமலையார், ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.57 மணியளவில் கோயில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். ஆண்டுக்கு ஒருமுறை, மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வர் அருட்காட்சியை தரிசித்த பக்தர்கள், பக்திப் பெருக்குடன் உள்ளம் உருகி விழிகளில் நீர்கசிய ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர். அப்போது, அண்ணாமலையார் திருக்கோயில் 3ம் பிரகாரம் கயிலாயம் போல காட்சியளித்தது. பக்தர்களின் விழிகள் மலை உச்சியை நோக்கி காத்திருந்தது.
மிகச்சரியாக மாலை 6 மணியளவில் கோயில் கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றியதும், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் துதியும், பாமாலையும், சங்கொலியும் முழங்க, பாரம்பரிய வழக்கப்படி பருவதராஜ குலத்தினர் மகா தீபம் ஏற்றினர். அப்போது, அகந்தை அழித்து அருள்ஒளி பெருக்கும் அண்ணாமலையார், ஜோதிப்பிழம்பாக மலைமீது காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து, திருக்கோயில் பிரகாரங்கள் தீபஒளியால் ஜொலித்தது. நகரெங்கும் வண்ணயமமான வாணவேடிக்கைகள் அதிர்ந்தன. வீடுகளில் அகல்தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். கிரிவலப்பாதையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மலைமீது காட்சியளித்த மகாதீபத்தை தரிசித்தனர்.
மகாதீப பெருவிழாவை தரிசிக்க, திருவண்ணாமலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். அதனால், திருக்கோயில், மாட வீதி, கிரிவலப்பாதை என காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையின் 14 கிமீ தூரமும் குடைகள் பிடித்தபடியும், ரெயின் கோட் அணிந்தபடியும், நனைந்தபடியும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. தீபத்திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன்ஆசிர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில், 15 ஆயிரம் போலீசார் மற்றும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட டிரோன்கள், 1024 இடங்களில் சிசிடிவி கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு(ஏஐ) கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தீபத்திருவிழாவை முன்னிட்டு 5484 சிறப்பு பஸ்கள், 16 ரயில்கள் இயங்கப்பட்டன. மேலும், 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள், 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டன. விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்எல்ஏக்கள், மேயர் நிர்மலாவேல்மாறன், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா, தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா, மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
* பரணி தீபத்தை தரிசிப்பது அதிர்ஷ்டம்: நடிகை ரோஜா
திருவண்ணாமலையில் நேற்று நடந்த பரணி தீப விழாவில் கலந்து கொண்ட நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா அளித்த பேட்டி: பரணி தீபத்தை தரிசிப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். எல்லோருக்கும் அது முடியாது. அமைச்சர் சேகர்பாபு மூலம் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடவுள் அருள் இருக்கிறது இதுபோதும். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வரும்போதும் 14 கி.மீ. கிரிவலம் செல்வோம். இந்த முறை கூட்டம் அதிகமாக இருந்ததால் செல்ல முடியவில்லை. தீபத்தை தரிசனம் செய்ததே வாழ்க்கையில் போதும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* 11 நாட்கள் மலை மீது காட்சி தரும் மகா தீபம்
தீபமலை மீது நேற்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சிதரும். அதன்படி, வரும் 13ம் தேதி வரை மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். அதையொட்டி, தினமும் மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அதற்காக, சுழற்சி முறையில் கோயில் திருப்பணியாளளர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் மலைமீது முகாமிட்டு தீபம் ஏற்றும் திருப்பணியை மேற்கொள்கின்றனர். தீபம் ஏற்றுவதற்கு தேவையான நெய், திரி, கற்பூரம் ஆகியவை, சிறப்பு பூஜைகளுடன் தினமும் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.
* மகாதீபத்துக்கு 4,500 கிலோ நெய்
அண்ணாமலை மீது ஏற்றப்பட்ட மகாதீபத்துக்கு 4,500 கிலோ நெய், 1,500 மீட்டர் திரி (காட்டன் துணி), 25 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரை ஐந்தரை அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்டது. மகாதீப கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் தீட்டப்பட்டுள்ளது.
* சிறப்பு தரிசனம் ரத்து
திருவண்ணாமலைக்கு 11 நாட்களும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
* மலையேற பக்தர்களுக்கு தடை
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, மகா தீபம் ஏற்றப்படும் மலைமீது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மலையேற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதிகபட்சம் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையும் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு பெஞ்சால் புயலால் தீபமலையில் மண் சரிவு ஏற்பட்டது. அதனால், மலையின் பல்வேறு இடங்களில் பாறைகள் சரியும் ஆபத்து ஏற்பட்டது. எனவே, கடந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் மலையில் மண் சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக புவியியல் வல்லுநர்கள் எச்சரித்தனர். எனவே, மலையேற பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தீபம் ஏற்றும் திருப்பணியில் ஈடுபடுவோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அதைெயாட்டி, தடையை மீறி மலையேறுவதை தடுக்க கூடுதல் போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டது. மலைப்பகுதியிலும் கமாண்டோ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


