திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா; 2,668 அடி உயர மலையில் நாளை மகாதீபம் ஏற்றம்: பக்தர்கள் மலையேற தடை; 15 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் உச்சக்கட்டமாக நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பேரிடர் மையம் எச்சரிக்கை காரணமாக பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. கோயில் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் கயிலாயம் போல காட்சியளிக்கிறது. மகா தீபத்திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால், நகரம் முழுவதும் விழாக்கோலமாக காணப்படுகிறது.
இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீப பெருவிழா நாளை (3ம்தேதி) நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி 3ம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் இட வசதிக்கு ஏற்றவாறு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாதீபம் ஏற்றுவதற்காக, 4,500 கிலோ முதல் தர தூய நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு, கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
1,500 மீட்டர் துணி திரி, உபயதாரர்கள் மூலம் நேற்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் வைத்து மகாதீப திரிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தீபத்திருவிழாவை தரிசிக்க இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 5,484 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து காட்பாடி வழியாகவும், பல்வேறு வழித்தடங்களிலும் திருவண்ணாமலைக்கு 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதையொட்டி திருவண்ணாமலை நகரை இணைக்கும் பிரதான சாலைகளில் 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வரும் 5ம்தேதி வரை தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும். மேலும், 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 12 ஆயிரம் கார் மற்றும் வேன்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 60 சிறப்பு கமாண்டோ படை வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்களுடன் 640 தீயணைப்பு வீரர்கள், 180 வனத்துறையினர் அவசரகால மீட்புப்பணிக்காக ஈடுபடுத்தப்படுகின்றனர். 67 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 74 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயில், மாட வீதிகள், நகரின் முக்கிய வீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் அதி நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்பட 1024 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
அதோடு, இந்த ஆண்டு முதன்முறையாக தீபத்திருவிழா கண்காணிப்பு பணியில், செயற்கை நுண்ணறிவு(ஏஐ) கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம், கூட்ட நெரிசலை எளிதில் கண்டறியவும், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டங்களை மிக துல்லியமாக அடையாளம் காணவும், பிரதான சாலைகளில் வாகன பதிவு எண்களையும் துல்லியமாக பதிவு செய்யவும் முடியும். அதேபோல், கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்கள் குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கும் வசதியும் உள்ளன. கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டும் மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தீபத்திருவிழாவின்போது, மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலை உச்சிக்கு சென்றது மகா தீப கொப்பரை
கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி மகாதீபம் ஏற்றுவதற்கான ஐந்தரை அடி உயரம் கொண்ட செம்பினால் உருவான மகா தீப கொப்பரை வண்ணம் தீட்டப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் திருவுருவத்துடன் தயார் நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் 4ம் பிரகாரத்தில் சிறிய நந்தி அருகே சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, 40பேர் கொண்ட திருப்பணியாளர்கள் தங்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். பின்னர், நெய் மற்றும் திரி ஆகியவை நாளை மலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளான நேற்று முன்தினம் மகா தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் 9ம்நாள் உற்சவம் இன்று காலை நடந்தது. சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. காலை உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர், 3ம் பிரகாரத்தை வலம் வந்து, திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் காலை 11.30 மணி அளவில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும் மேளதாளம் முழங்க மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கைலாச வாகனத்தில் அண்ணாமலையார் பிரியாவிடை, காமதேனு வாகனத்தில் உண்ணாமுலையம்மன், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரர் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர்.