Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் உள்ள அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

திருவள்ளூர்: திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர், பெரும்பாக்கம், நேதாஜி சாலையில் உள்ள திரவுபதி அம்மாள் சமேத தர்மராஜா கோயிலில் ஆடி மாத தீமிதி திருவிழா கடந்த 26ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி 18 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை, மாலை இருவேளையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த தீமிதி திருவிழாவில் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், ஏரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம், பேண்டு, வாத்தியம் முழுங்க வாணவேடிக்கைகளுடன் திரவுபதி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் டி.என்.ஆர்.சீனிவாசன், அறங்காவலர்கள் பாஸ்கர், சுந்தரி ராகவன், விழாக்குழு தலைவர் பிரகாஷ், விழா குழுவினர் சண்முகம், பொன் பாண்டியன், ஏபிஎஸ்.பாபு, சுந்தரம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே உள்ள, எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி கிராமத்தில் கிராம தேவதையான ஸ்ரீ எலமாத்தம்மன் கோயிலின் 9ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் முக்கிய நிகழ்வாக நேற்று காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் 296 பேர் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இறுதி நாளான நேற்று அம்மனுக்கு அபிஷேகமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இவ்விழாவிற்கு சூளைமேனி, பெரம்பூர், லட்சிவாக்கம், தண்டலம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சி காட்டுகொள்ளை மேடு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த நிகழ்வையொட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜையும் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும், காப்பு கட்டிய பக்தர்கள் 150 பேர் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து கோயிலை வலம் வந்தனர். பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அனுப்பம்பட்டு கோயில் திருவிழா : மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையம் அருகே, அனுப்பம்பட்டு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் 4வது வார ஆடித் திருவிழா நேற்று நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு பொங்கலிட்டு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திருக்கோயில் அறங்காவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், அனுப்பம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு, ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா சங்கர் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக டி.ஜெ கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டார். அவருடன் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளார் காணியம்பாக்கம் ஜெகதீசன், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ஜி.ரவி, மீஞ்சூர் பேரூர் திமுக செயலாளர் தமிழ் உதயன், வழக்கறிஞர் சுரேஷ், அனுப்பம்பட்டு மணி, சேகர், ரமேஷ், தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் ரகு, கருணாநிதி,

பவுன்ராஜ், ருக்குமாங்கதன், ஹமச்சந்தர், கார்த்திக், வெங்கடேசன், ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல், மேட்டுப்பாளையம் கிராமத்தில் விவசாயி ஆர்.எம்.ஆர் ஜானகிராமன் தோட்டத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் ஆலயத்தில் 4ம் வார ஆடித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராம மக்கள் பொங்கலிட்டு பூஜை செய்து வழிபட்டனர் .

* தீயில் விழுந்து சிறுவன் காயம்

கும்மிடிப்பூண்டி, காட்டுக்கொள்ளைமேடு சக்தி மாரியம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் அதே பகுதியைச் சேர்ந்த மோனிஷ் (7) என்ற சிறுவன் எதிர்பாராமல் தீக்குழியில் விழுந்தான். அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 40 சதவீத தீக்காயங்களுடன் சிறுவன் மோனிஷ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.