Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் திருப்பூர் முதல் இடத்தை பிடித்தது கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டு

திருப்பூர் : இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு தேடி பல்வேறு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்கின்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடன் தங்களது குடும்பத்தினரையும் அழைத்து செல்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கின்ற சம்பள தொகையில் பெரும்பாலான தொகை உணவிற்கே செலவு செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தியது.

இந்த திட்டத்தின் படி எந்த மாநில ரேசன் கார்டுதாரர்களும், தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்கலாம். தமிழகம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இந்த திட்டத்தில் இணைந்தது. இதனால், தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் வெளிமாநிலங்களை சோ்ந்த புலம் பெயா்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த பலரும் பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகிறார்கள்.

இதற்கிடையே தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட திருப்பூரில் தான் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதுபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களிடம் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் குறித்து அதிகாரிகள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதனால், வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வருகிறார்கள். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் அதிகளவு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொருட்கள் வழங்கிய மாவட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்தது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் அவினாசி தாலுகாவில் 123 பில், பிப்ரவரி மாதம் 156 பில், மார்ச் மாதம் 65 பில், ஏப்ரல் மாதம் 66 பில் பதிவாகியுள்ளது. இதில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் மடத்துக்குளம் தாலுகாவில் ஒரு பில் 20 கிலோ கோதுமை பெறப்பட்டுள்ளது. இதுபோல் பல்லடம் தாலுகாவில் 9 பில் 103 கிலோ கோதுமை, திருப்பூர் வடக்கு பகுதியில் 49 பில் 623 கிலோ கோதுமை, திருப்பூர் தெற்கு 7 பில் 66 கிலோ கோதுமை என 66 பில் 812 கிலோ கோதுமை ரேசன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் வெளிமாவட்ட தொழிலாளர்களும் அதிகளவு பொருட்கள் வாங்கி பயனடைந்துள்ளனர். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் அவினாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், வடக்கு, தெற்கு, உடுமலை, ஊத்துக்குளி ஆகிய 9 தாலுகா அலுவலகங்களிலும் உள்ள ரேசன் கடைகளில் 84 ஆயிரத்து 438 பில்கள் பதிவாகியுள்ளது. இதில் 29 டன் அரிசி வினியோகிக்கப்பட்டுள்ளது. 85 டன் சர்க்கரையும், 28 டன் கோதுமையும், 57 டன் பருப்பும், 57 ஆயிரம் கிலோ பாமாயிலும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும் 36 டன் அரிசியும், முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு 293 டன் அரிசியும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் தமிழகம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான பில் ஒட்டுமொத்தமாக 88 பதிவானது. இதில் திருப்பூர் மாவட்டம் 66 பில்களுடன் முதலிடமும், சென்னை 8 பில்களுடன் 2-வது இடமும் பிடித்தன.

இதுதவிர கோவையில் 2, திண்டுக்கல் 1, ஈரோடு 1, கன்னியாகுமரி 1, கிருஷ்ணகிரி, 1, ராமநாதபுரம் 1, சேலம் 2, தென்காசி 1, திருவள்ளுர் 2, திருவண்ணாமலை 1 என 15 மாவட்டங்களில் பில் பதிவானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பூர் மாவட்டம் முதல் இடம் பிடித்த நிலையில் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டு தொிவித்தார்.