Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பூர் மாநகராட்சியில் முதல் முறையாக 250 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் முதல் முறையாக 250 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். கமிஷனர் ராமமூர்த்தி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், மண்டல தலைவர் கோவிந்தசாமி பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் 3 மற்றும் 4வது மண்டலத்திற்கு ஒரு உதவி கமிஷனர் தான் இருந்தார். தற்போது, அவருக்கும் ஊட்டியை கண்காணிக்க கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதால், காலியாக உள்ள பகுதிகளுக்கு உடனுக்குடன் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:தங்கராஜ்: சந்திராபுரம் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

கோபால்சாமி: 6வது வார்டில் குடிநீர் வீணாகி வருகிறது. இதுபோல் மின்தடை அதிகமாக உள்ளது. அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பயன் இல்லை. எனவே இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

சேகர்: கே.ஆர்.லே அவுட் சிறுவர் பூங்காவில் மாநகராட்சி இடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். குழந்தைகளுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். என்றார்.

அன்பகம் திருப்பதி: வரி குறைப்பு தொடர்பாக உரிய பதில் அளிக்க வேண்டும். ரோடுகளில் உள்ள சிறு, சிறு பள்ளங்களை சரி செய்ய வேண்டும். இதனை புனரமைக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். என்றார்.

செந்தில்குமார்: குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மாநகரில் தற்போது போக்குவரத்து நொிசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். புதிய குடிநீர் இணைப்பு பெறுகிறவர்களுக்கு டெபாசிட் தொகையை அதிகரிக்க கூடாது. என்றார்.

ராஜேந்தின்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் பல இடங்களில் சேதமாகி உள்ளது. இதுபோல் குடிநீர் தொட்டியை மாற்றி தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதனை மாற்றித்தர வேண்டும். என்றார்.

நாகராஜன்: பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கியதால் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

செல்வராஜ்: வேலம்பாளையம் பகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ரூ.40 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டது. ஆனால் இன்னமும் திறக்கப்படவில்லை. எனவே இதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

மணிமேகலை: புதிய குடிநீர் இணைப்பு வழங்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் தாமதம் ஏற்படுவதை தடுக்க வேண்டும். விரைவாக ரசீது வழங்க வேண்டும். குப்பாண்டம்பாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடத்தில் கழிவறை வசதி செய்து தர வேண்டும். என்றார்.

பெனாசீர்: எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 85 சதவீதம் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்துள்ளது. 15 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளது. இதனால் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 6 மாதமாக மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே இதனை நிரப்ப வேண்டும். என்றார்.

காந்திமதி: குடிநீர் 12 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. இதனை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

துளசிமணி: குமார் நகர், நெசவாளர் காலனி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பறைகளை அதிகப்படுத்த வேண்டும். மாணவ மாணவிகளின் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகமாக உள்ளது. இதுபோல் ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். என்றார்.

அருணாச்சலம்: மழை பாதிப்பின் போது வீரபாண்டி பகுதிகளில் அதிகளவு மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தர வேண்டும். என்றார்.

சாந்தாமணி: குப்பைகளை அகற்ற பேட்டரி வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும். இதுபோல் ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளது. எனவே ஆட்களை அதிகப்படுத்த வேண்டும். தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். என்றார்.

ஆனந்தி: புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். என்றார்.

கவிதா நேதாஜி கண்ணன்: ஜனசக்தி நகரில் உள்ள சமையல் கூடம் பழுதடைந்துள்ளது. இதனை பராமரிக்க வேண்டும். இதுபோல் சமுதாய நலக்கூடத்தையும் விரைவாக பராமரிக்க வேண்டும். என்றார்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.பின்னர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் 4வது குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணியால் சேதப்படுத்தப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.

1778 சாலைகள் 227 கி.மீ தூரத்திற்கு ரூ.137 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட இருக்கிறது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. மீதம் ஒரு 140 கி.மீ தூரத்திற்கு சாலைகள் புனரமைக்கப்பட உள்ளது.

இதுபோல் சிமெண்ட் சாலைகள் குறிப்பிட்ட பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. இதுபோல் கடந்த 2 மாதத்தில் 4வது குடிநீர் திட்டத்தில் விடுபட்ட 39.30 கி.மீ. பகுதிகளில் குடிநீர் பைப் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 62 கி.மீ. பணிகள் மீதமுள்ளது. இது வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இதுபோல் 2535 லீக்கேஜை சரி செய்துள்ளோம். 68 குடிநீர் தொட்டிகளில் 64 குடிநீர் தொட்டிகளில் குடிநீர் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அளவீடு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. 984 தெருவிளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

குப்பைகளை அகற்ற தீர்வு காணும் வகையில், கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளை உள்ளடக்கி கருமத்தப்பட்டி பகுதியில் மறுசுழற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தான் குப்பைகள் கொட்டப்பட்டது. 9 மாதங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

ஆனால் சில அமைப்புகள் தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்து வருகிறார்கள். பாறைக்குழி நிரம்பியதும், அதனை சமன் செய்து விளையாட்டு மைதானம், பூங்கா அமைத்து கொடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளோம். இதனை நிறைவேற்றி கொடுப்போம். பொதுமக்களை திசைதிருப்ப இவ்வாறு திடீரென போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாநகராட்சியில் 250 பேருக்கு முதல் முறையாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

கமிஷனர் பணி ஓய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த ராமமூர்த்தி கடந்த ஜுலை மாதம் திருப்பூருக்கு பதவி உயர்வு பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) அவரது பணிக்காலம் முடிவு பெறுகிறது. இதனால் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியின் கடைசி கூட்டம் என்பதால் நேற்று அவருக்கு பலரும் பாராட்டு தொிவித்தனர். இதுபோல் மாநகராட்சி சுகாதார அலுவலர் முனியாண்டி மற்றும் துய்மை பணியாளர்கள் என 9 பேர் பணி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பலரும் வாழ்த்து கூறினர்.

அதிமுக வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பான தகவல்களை தெளிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுக எதிர் கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.