Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு டிக்கெட்டில் ஒரே நாளில் 2 முறை சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு: தேவஸ்தான அதிகாரிகள் தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16ம் தேதி அன்று புஷ்பயாகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த மாதம் ஆன்லைனில் வெளியிட உள்ளது. இந்த டிக்கெட் விலை ரூ.700 ஆகும். அதிகபட்சமாக இரண்டு நபர்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். புஷ்ப அபிஷேகம் டிக்கெட் பெற்றவர்கள், காலை 6 மணிக்கு திருமலையில் உள்ள சுபதம் நுழைவு வாயில் வழியாக கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெறும் அபிஷேக சேவையில் பங்கேற்கலாம்.

அதன் பிறகு, அவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். பின்னர், அதே நாளில் இரண்டாவது முறையாக மதியம் 12:30 மணிக்கு அதே டிக்கெட் மூலம் பக்தர்கள் சுபதம் வாயில் வழியாக மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் புஷ்ப யாகம் உற்சவத்தில் பங்கேற்று, அதன்பிறகு பக்தர்கள் மீண்டும் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம், ஒரு டிக்கெட்டில், ஒரே நாளில் இருமுறை சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்குகிறது.

* சிபாரிசு கடிதத்துக்கு மாதம் ஒரு முறை மட்டுமே அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் ஆகியவை ஆந்திரா, தெலங்கானா மாநில எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதம் மூலமும், இதர மாநில எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வருபவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரே மாதத்தில் பலமுறை சிபாரிசு கடிதங்கள் மூலம் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதையடுத்து மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சிபாரிசு கடிதத்தின் மூலம் சுவாமி தரிசனம் செய்து வைக்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.