திருப்பதியில் செப்.15 முதல் 23ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவ விழா: இந்தாண்டு கூடுதலாக அக்டோபரில் பிரமோற்சவம்
திருமலை: திருப்பதியில் செப்டம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஏழுமலையானுக்கு பிரம்மனே முன்னின்று நடத்தும் வருடாந்திர பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. இந்தாண்டு கூடுதலாக 2வது பிரமோற்சவம் அக்.12ல் தொடங்குகிறது. கலியுகத்தின் வாழும் தெய்வமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களில் பிரமோற்சவம் மிக முக்கியமானவை. இந்த ஆண்டு கூடுதல் மாதம் காரணமாக இரண்டு பிரம்மோற்சவங்களில் சாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். புராணங்களின்படி, வெங்கடாதிரியில் சீனிவாச பெருமாள் அவதரித்த ஆரம்ப நாட்களில் பிரம்மதேவனை அழைத்து, உலகின் நலனுக்காக தனக்கான உற்சவம் திருவிழாக்களை ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார்.
சுவாமியின் கட்டளைப்படி, பிரம்மதேவன் ஒன்பது நாட்கள் பிரமோற்சவங்களை நடத்தினார். புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் சீனிவாச பெருமாள் ஆனந்த நிலையத்தில் கோயிலில் அவதரித்ததால் பிரம்மன் முன்னின்று நடத்தும் பிரமோற்சவம், இந்த நாளில் நிறைவு பெறும் விதமாக அன்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெலுங்கில் நட்சத்திர திதி அடிப்படையில் அதிக மாதங்கள் வரும்போது அந்த ஆண்டில் மட்டும் இரண்டு பிரமோற்சவம் நடத்தப்படுகிறது. சந்திர நாட்காட்டியின்படி புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நிறைவு பெறும் விதமாக நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவமாகவும், தசரா நவராத்திரிகளில் நடைபெறுவது நவராத்திரி பிரமோற்சவமாகவும் நடத்தப்படுகின்றன.
இந்த 2 பிரம்மோற்சவங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவங்களில் கொடியேற்றம் அல்லது கொடியேற்றம் இறக்கம் இருக்காது. அவ்வாறு இந்தாண்டு வருடாந்திர பிரமோற்சவம் செப்டம்பர் 15 முதல் 23 வரையிலும், நவராத்திரி பிரமோற்சவம் அக்டோபர் 12 முதல் 20 வரையிலும் நடைபெறும். காலை வாகன சேவை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு வாகன சேவை மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் நடைபெறும். முக்கிய கருட வாகன சேவை மாலை 6.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.
அதன்படி வருடாந்திர பிரமோற்சவம் வரும் 15ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கும். இதற்காக தேவி, பூதேவியின் சமேத மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் தங்க கொடிக்கம்பத்தில் கருட கொடியை ஏற்றுவர். கடைசி நாளான 23ம் தேதி காலையில், சக்ரஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) நடைபெறும். முதலில், அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், நெய், தேன் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து சக்ரஸ்நானத்தின் போது, பக்தர்களும் தெப்பக்குளத்தில் நீராடுவர்.தொடர்ந்து அன்றிரவு கொடி இறக்கப்பட்டு பிரமோற்சவம் நிறைவு செய்யப்படும்.



