Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 18ம்தேதி காலை 10 மணி முதல் 20ம்தேதி காலை 10 மணி வரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 22ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் 22ம்தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் வெளியிடப்படும்.

அக்டோபர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23ம்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அதேபோல் வாணி அறக்கட்டளைக்கு ₹10 ஆயிரம் நன்கொடை செலுத்தி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் 23ம்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான டிக்கெட்டுகள் 23ம்தேதி மாலை 3 மணிக்கும், அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன ₹300 டிக்கெட்டுகள் ஜூலை 24ம்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

அதேபோல் திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவு 24ம்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். எனவே பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான ேநற்று 84,797 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 29,497 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.98 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.