Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

30 வயதுக்கு மேல் கர்ப்பமாகும் பெண்களுக்கு டிப்ஸ்!

ஆமாம். பெண்கள் கர்ப்பம் தரிக்கத் திட்டமிடும் வயது இன்று மாறிவிட்டது. உயர்கல்வி, சவாலான தொழில் வாழ்க்கை, நிதி இலக்குகள், இருபதுகளில் தாய்மைக்குத் தயாராக இல்லை என்ற உணர்வு போன்றவை இருபதுகளின் இறுதியில் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக்கி உள்ளன.

உண்மையில் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், பல பெண்கள் உணராத ஒரு விஷயம் இருக்கிறது. அது என்ன தெரியுமா?

கருவுறுதலுக்கு என ஓர் உயிரியல் கடிகாரம் உண்டு. அது எப்போதும் வாழ்க்கைத் திட்டங்களைப் பின்பற்றுவதில்லை.

கருவுறுதல் நிபுணர்கள் அடிக்கடி காணும் ஒரு பிரச்னை, குறைந்த அண்ட இருப்பு, அதாவது கருமுட்டை. பல பெண்கள் கருத்தரிக்க முயற்சி செய்யத் தொடங்கும் போதுதான் இதைப் பற்றி கேள்விப்படுகிறார்கள்.

குறைந்த கருமுட்டை இருப்பு என்பது பெண்களின் வயதுக்கு எதிர்பார்க்கப்படுவதைவிட குறைவான கரு‘முட்டைகளே கருப்பையில் எஞ்சியிருப்பதாகும்.

கவனிக்க... இதன் பொருள். பெண்களால் கருத்தரிக்கவே முடியாது என்பதல்ல. மாறாக அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் என்பதுதான்.

இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில் குறைந்த கருமுட்டை இருப்பு என்பது மலட்டுத்தன்மைக்கான அறிகுறி அல்ல.

ஒவ்வொரு பெண்ணும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கருமுட்டைகளுடன்தான் பிறக்கிறார். உடலில் உள்ள மற்ற பல செல்களைப் போலல்லாமல், கருமுட்டைகளை மீண்டும் உருவாக்க முடியாது. வயது அதிகரிக்கும்போது கருமுட்டைகளின் எண்ணிக்கையும் தரமும் இயற்கையாகவே குறைகின்றன.

சில பெண்களுக்கு இந்தச் சரிவு எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு 30 வயதுக்குப் பிறகு கருவுறுதல் திறன் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது.

முப்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை இது மேலும் தீவிரமாகச் சரிவடைகிறது.

ஆனால், வயது என்பது குறைவான கருமுட்டைக்கான காரணங்களின் ஒரு பகுதி மட்டுமே. மரபணுக்கள், முந்தைய சினைப்பை அறுவை சிகிச்சை, எண்டோமெட்ரியோசிஸ், உடலைத் தாக்கும் நோய்கள், கீமோதெரபி மற்றும் சில நோய் கள் கருமுட்டை இருப்பைப் பாதிக்கலாம்.

சில பெண்களுக்கு இருபது வயதிலேயே கூட எதிர்பார்த் ததை விட மிக முன்னதாகவே சினைப்பை முதுமையடைதல் ஏற்படுகிறது.

கருவுறுதல் சிகிச்சையை நாடும் பெண்களை உள்ளடக்கிய ஒரு பெரிய இந்திய ஆய்வில், 30 வயதுக்குட்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட 29 சதவீதம் பேருக்கு ஏற்கனவே எதிர்பார்த் ததை விட குறைவான கருமுட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விகிதம் வயது அதிகரிக்க அதிகரிக்க உயர்ந்து வருகிறது என்பது கவலையளிக்கும் விஷயம். இதனால் சில பெண்களுக்கு சினைப்பை முதுமையடைதல் முன்கூட்டியே ஏற்படக்கூடும். என்கிறார்கள் மருத்துவர்கள். இதை முன்பே உடல் வெளிப்படையாக எச்சரிக்குமா?

சொல்வதற்கில்லை என்பதே மருத்துவர்களின் பதில். பல பெண்கள் தாங்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவே உணர்கிறார்கள். மாதவிடாய் சுழற்சிகள் இயல்பாகவே இருக்கலாம்.

சில பெண்கள் மட்டுமே ஒழுங்கற்ற மாதவிடாயைக் கவனிக்கிறார்கள். மற்றவர்களோ கருத்தரிப்பதில் சிரமம் ஏற்பட்ட பின்னரே இந்த நிலையைக் கண்டறிகிறார்கள்.

கருமுட்டைகளின் இருப்பை மருத்துவர்கள் பொதுவாக இரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் மூலம் மதிப்பிடுகிறார்கள். பொதுவாகப் பயன்படுத்தப்படும் சோதனைகளில் ஒன்று ஆன்டி-முல்லேரியன் ஹார் மோனை அளவிடுவது.

இந்த ஹார்மோன், மீதமுள்ள கருமுட்டை இருப்பைக் கணக்கிட உதவுகிறது. சினைப்பைகளில் உள்ள சிறிய நுண்ணறைகளைக் கணக்கிடவும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதற்காக டெஸ்ட் ரிசல்ட்டை வைத்தே இயற்கை யாகவே கருத்தரிப்பு நிகழ்வதை கணிக்க முடியும் என்று சொல் லிவிட முடியாது. வயது, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் கருமுட்டையின் தரம் ஆகியவற்றை ஆராய்ந்தே இறுதி முடிவுக்கு வரமுடியும்.

குறைந்த கருமுட்டை இருப்பு இருப்பதால், கர்ப்பம் தரிப்பது சாத்தியமே இல்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. கருமுட்டை குறைவாக இருப்பதை அறிந்ததும் பல பெண்கள் மனதளவில் தளர்ந்துபோகிறார்கள். இதற்கு அவசியமேயில்லை. பல பெண்கள் இயற்கையாகவே கருத்தரிக்கிறார்கள். மற்றவர் களுக்கு கருவுறுதல் சிகிச்சை தேவைப்பட லாம். இதைத்தான் மனதில் பதிய வைக்க வேண்டும்.

எனவே, தற்போதைய நிலையை அறிந்து அதற்கேற்ப திட்டமிடுவதே முக்கியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து. கருவுறுதல் தொடர்பான வழி முறைகளைத் திட்டமிடலாம். அதாவது விரைவில் முயற்சிப்பது அல்லது கருமுட்டையைப் பாதுகாப்பது போன்ற வழிமுறைகள் இதில் அடங்கும்.

கர்ப்பத்தைத் தாமதப்படுத்த நினைக்கும் பெண்கள், கருவுறுதலைப் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை மருத்துவர்களிடம் பெறலாம்.

இந்த இடத்தில் கர்ப்பத்தைத் தள்ளிப்போட விரும்பும் பெண்களிடையே, கருமுட்டை உறையவைத்தல் மூலம் கருவுறுதலைப் பாதுகாப்பது என்பது ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறி யுள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இது அனைவருக்கும் அவசியமல்ல. சினைப் பையின் இருப்பை முன்கூட்டியே அறிவது, பிற்காலத்தில் எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக மாற்று வழிகளை ஆராய அனுமதிக்கிறது சரி. கருமுட்டைகள் குறைவதைத் தடுக்க முடியுமா?

முழுமையாக முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள். அதேநேரம் பல கட்டுக்கதைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்கிறார்கள்.

எந்தவொரு உணவுமுறையாலோ, துணை உணவாலோ அல்லது அற்புத மருந்தாலோ ஒரு பெண்ணிடம் உள்ள கருமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது.

ஆனால், சோஷியல் மீடியாவில் அப்படி முடியும் என்று சொல்லும் விளம்பரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறிவியல் அவற்றை ஆதரிப்பதில்லை.

உணவுக்கும் கருமுட்டைகளின் எண்ணிக்கைக்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால், சமச்சீரான உணவு, புகைபிடிக்காமல் இருப்பது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் நாள்பட்ட நோய் களைக் கையாள்வது போன்ற வாழ்க்கை முறைகள் ஒட்டுமொத்த கருவுறுதலை மேம்படுத்தக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே, தேவையற்ற அச்சங்களை ஒதுக்கிவைத்துவிட்டு மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.

திரும்பத் திரும்ப சொல்வது ஒன்றுதான். கருமுட்டை இருப்பு குறைவதால் கருத்தரிக்கவே முடியாது என்ற முடிவுக்கு வரவேண்டாம். இது மலட்டுத்தன்மை அல்ல. சரியா..? உற்சாகமாக மருத்துவரின் ஆலோசனைகளுடன் தாய்மைக்குத் தயாராகுங்கள்

- என்.ஆனந்தி.