Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காலத்தின் அவசியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான 16 லட்சம் ஏக்கர் டெல்டா பாசனத்திற்கு உயிரூட்டுவது காவிரிநீர். குடகு மலையில் ஊற்றெடுத்து, தமிழ்நிலத்தில் பொங்கி பிரவாகம் எடுக்கும் காவிரி நீரின் உரிமைக்காக பல்லாண்டுகளாக நாம் போராடி வருகிறோம். பெரும் சட்டப்போராட்டங்களையும் சந்தித்துள்ளோம். கடந்த கால அரசுகளின் கடும் முயற்சியால் இதற்குரிய தீர்வு கடந்த 2018ம் ஆண்டு கிடைத்தது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். இதை காவிரி மேலாண்மை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த நீரை தமிழகம் பெறுவது என்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது. உரிய நேரத்தில் காவிரி நீரை கர்நாடகம் திறந்து விடுவதில்லை. ஆனால் பெருமழைக்காலங்களில், அங்குள்ள அணைகளில் கட்டுப்படுத்த முடியாத உபரிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுகிறது.

இதையே தமிழகத்திற்கு வழங்கப்பட்ட காவிரிநீர் என்று ஆணையத்திடம் கணக்கும் காட்டி வருகிறது கர்நாடகம். இப்படிப்பட்ட நிலையில் அந்த உபரிநீர் கூட, தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டுள்ளது கர்நாடகம். அங்குள்ள ராமநகரா மாவட்டத்தில் மேகதாது என்னும் இடத்தில் பிரமாண்ட அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதற்கு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை மறைமுக அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தகவல் கசிந்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி நீர் திறக்கப்பட்டு வந்தது. நடப்பாண்டு கர்நாடகம் உரியநீரை வழங்காததால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. இதுதொடர்பாக 2 முறை நடந்த காவிரி ஆணைய கூட்டத்திலும் நீரை திறக்க மறுப்பு தெரிவித்து முரண்டு பிடித்தது கர்நாடகம். உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்கு நீர் கிடைக்காததால் வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். அதேநேரத்தில் டெல்டாவை பாலைவனமாக்கும் மேகதாது திட்டத்தில் தீவிரம் காட்டுகிறார்கள் கர்நாடக அரசியல் தலைவர்கள்.

ஆனால் இதற்குரிய ஆலோசனைகள் நடத்தி தீர்வுகளை முன்னெடுக்க வேண்டிய தமிழக முதல்வரோ, அலட்சியமாக இருக்கிறார். தமிழகத்திற்கு நீர் தரக்கூடாது என்பதில் கர்நாடகத்தின் அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று ஒற்றுமை காட்டுகிறது. ஆனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆலோசிக்க வேண்டிய முதல்வர், வெகுதூரம் விலகி நிற்கிறார்.

உயிர்நாடியான உணர்வுப்பூர்வ பிரச்னையில் அனுபவமுள்ள அரசியல் கட்சிகளை அழைத்து இதற்கான கூட்டத்தை உடனடியாக நடத்தி இருக்க வேண்டும். அரசியல் களத்தில் வேறுபாடுகள் இருந்தாலும், வாழ்வாதார பிரச்னையில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை முரண்டு பிடிக்கும் கர்நாடகத்திற்கும், பிரச்னையில் இரண்டுமுகம் காட்டும் ஒன்றிய அரசுக்கும் உணர்த்தியிருக்க வேண்டும். நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக தவிர்த்து அனைத்து கட்சிகளும் வைக்கும் ஒருமித்த கோரிக்கை இதுதான்.

ஆட்சி சார்ந்த அதிகாரம் என்பது மக்கள் அளித்த தீர்ப்பு. அந்த தீர்ப்ைப மதித்து அனுபவமுள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை கேட்டு மாநிலத்தை வழி நடத்துவது ஆட்சிக்கு சிறப்பு சேர்க்கும். மாறாக நான் எதற்கும் செவிசாய்க்க மாட்டேன் என்றால், அது மக்கள் மனதில் வெறுப்பை மட்டுமே விதைக்கும். இதை உணர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டியது காலத்தின் அவசியம்.