அரசியல் அரங்கை மீண்டும் அதிர வைத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அவரது ஒரு சிறிய, எளிய அறிக்கையே இந்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் தற்குறித்தனமான பேச்சுக்கு கொடுத்த பதில் என இதை சுருக்கி விட முடியாது. பல காலமாக திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு இழிவான செயல்களை செய்துவந்தவர்களை தனது அறிக்கையின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார் ரஜினி என்றுதான் சொல்ல வேண்டும்.
ரஜினியின் இந்த அறிக்கை மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அதேநேரத்தில், ஆதவ் அர்ஜுனா போன்ற கத்துக்குட்டிகளுக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினி பதில் சொல்ல வேண்டுமா என்ற நியாயமான கேள்விகளையும் பலர் எழுப்பியுள்ளனர். ‘காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச்சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம் தலைவா. வேதனை, வெட்கம், அவமானம். காலம் பதில் சொல்லும். களத்தில் சந்திப்போம்’ என அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசியல் அனுபவம் துளியும் இல்லாத ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் சென்னையில் நடந்த கண்டனக் கூட்டத்தில், விஜய்யை புகழ்வதாக நினைத்து ரஜினியை மட்டம் தட்டிப் பேசினார். ‘அரசியலில் ஜொலிக்க வேண்டுமென வந்த ரஜினிகாந்தை மிரட்டி, அரசியலுக்கு வர விடாமல் திமுக தடுத்தது. அவரும் நடிக்க சென்றுவிட்டார். ஆனால் விஜய்யை இதுபோல் மிரட்ட முடியாது. அவர் மனவலிமை மிக்கவர்’ என பேசியிருந்தார்.
இந்த பேச்சு எவ்வளவு அபத்தம் என்பது அரசியலில் இல்லாதவர்களுக்கு கூட எளிதில் புரியும். அரசியலில் இருந்து விலகுவது என்பது ரஜினி எடுத்த தனிப்பட்ட முடிவு. தனது உடல்நிலையை காரணம் காட்டியே இந்த முடிவை எடுத்தார். மிரட்டலுக்கு அஞ்சுபவர் என்பது அவரை கொச்சைப்படுத்துவது.
சர்வ வல்லமை பொருந்தியவராக ஜெயலலிதாவை நினைத்து அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரை துச்சமாக தூக்கியெறிந்து துணிந்து நின்று பேசியவர் ரஜினி. 1996 சட்டப்பேரவைத் தேர்தலில், ‘‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய அதிரடி கருத்து, அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த பேச்சு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்பட்டது.
தனது திரைவாழ்வின் எதிர்காலம், தனிப்பட்ட மிரட்டல்கள் என எதைப்பற்றியும் எண்ணாமல் இப்படி நெஞ்சுரத்துடன் பேசியவரை பார்த்து தான் ஆதவ் அர்ஜுனா கோழை என்கிறார். தவிர, ‘நான் பயப்படுவது இரண்டு பேருக்கு தான். ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு. இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல’ என பேசியவர் ரஜினி.
ரஜினிக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பல்வேறு மட்டத்திலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடைசியில் ரஜினியே இறங்கி வந்து அறிக்கை கொடுத்திருக்கிறார். தன்னைப் பற்றி உண்மைக்கு மாறாக, அவதூறான கருத்தை ஆதவ் கூறியிருக்கிறார். காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார். இது ஆதவ் அர்ஜுனாவுக்கான பதில் அல்ல. அவரை வைத்து பின்னணியில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ரஜினி கொடுத்த எச்சரிக்கை.
ரஜினி அரசியலுக்கு வரும்போதும் தெளிவாகவே இருந்தார். தனது அரசியல் தேசிய, ஆன்மிக அரசியல் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். அவரிடம் கொள்கை இருந்தது. ஆதவ்வின் தலைவர் அப்படியா. என்ன கொள்கை இருக்கிறது. பாசிசம், பாயாசம் என்று எழுதிக்கொடுத்ததை தான் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்.
அரசியல் கட்சியை துவக்க நினைத்தபோதே, தான் முதல்வராக விரும்பவில்லை. ஐஏஎஸ் போன்று படித்தவர்களை முதல்வராக்கவே மனதில் வைத்துள்ளேன் என கூறியவர் ரஜினி. அதுபோல் எந்த தலைவரையும் மரியாதைக் குறைவாக ரஜினி பேசியதாக வரலாறே இல்லை. ஆனால் ஆதவ் புகழும் அவருடைய தலைவரின் லட்சணத்தை அனைவரும் அறிவார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என எல்லோரையும் தரம் தாழ்ந்து விமர்சித்தவர், விமர்சித்துக்கொண்டிருப்பவர் அவர்.
ரஜினி உள்பட போட்டியாக நினைக்கும் பல நடிகர்களின் படம் வெளிவரும்போது அந்தப் படத்தை பற்றி தரக்குறைவாக தனது ரசிகர்கள் மூலமும் இன்புளூயன்சர்கள் வழியாகவும் விமர்சித்து, அந்த படங்களின் வணிகத்தை கெடுக்க நினைத்தார்கள். சினிமாவில் செய்த அதே பாணியை அரசியலுக்கும் கொண்டுவர நினைக்கிறார்கள். ஆதவ் போன்றவர்கள் அதற்கு பயன்படுத்தப்படுகின்றனர். இதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ரஜினியின் அறிக்கை.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதற்கு திமுகவை காரணம் காட்டி ஒரு சீன் கிரியேட் செய்தார்கள். அடுத்து ஜனநாயகன் சென்சார் தடங்கலுக்கும் ஒரு கதை விளக்கம். பின் சிபிஐ விசாரணைக்கு சென்றபோது அதற்கும் ஒரு பின்னணி பின்னினார்கள். விவாகரத்து விஷயத்திலும் திருமண விழாவுக்கு திரிஷாவை அழைத்து வந்ததிலும் இதையே செய்தார்கள். இப்போது பிரபலங்களை தாக்கி ‘லைம் லைட்’டில் இருக்க நினைக்கிறார்கள். இந்த ‘டெஸ்கிரிப்டிவ் நெரேஷன்’ யுக்தியை இப்போது மக்கள் தெரிந்துகொண்டு விட்டார்கள். இனி இதுபோன்ற வேலை எடுபடாது.


